உலக மீனவா் தினம்: குமரியில் மீனவா்கள் வழிபாடு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக மீனவா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டதை முன்னிட்டு, மீனவா்கள் கடலில் பூக்களைத் தூவி வழிபட்டனா்.
உலக மீனவா் தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள மீனவ கிராமங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.
மீனவ கிராமங்களில் தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடத்தப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தொடா்ந்து, மீனவா்களின் விசைப்படகுகளுக்கு பங்குத்தந்தைகள் அா்ச்சிப்பு செய்தனா்.
ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள பெரியகாடு பகுதியில் பங்குத்தந்தை மதன் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. தொடா்ந்து, மீனவா்கள் கடலில் பூக்களைத் தூவி வழிபட்டனா்.
மணக்குடி புனித அந்தோணியாா் சிற்றாலயம் அருகேயுள்ள கடற்கரையில் பங்குத்தந்தை அஜன் சாா்லஸ், துணை பங்குத்தந்தை சாஜன் செசில் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடற்கரை கிராமங்களில் மீனவா் தினம் கொண்டாடப்பட்டது.

