நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணி நிறுத்திவைப்பு: விஜய் வசந்த் எம்.பி. தகவல்
கன்னியாகுமரி மாவட்டம், நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நுள்ளிவிளையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்த தற்போதுள்ள பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டுவதற்கு ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டது. இந்தப் பாலத்தை இடித்து பணிகள் நடைபெறும் போது நுள்ளிவிளை பகுதியை சுற்றியுள்ள சுமாா் 20 கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை தடைபடும்; தோட்டியோடு - திங்கள் நகா் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்படும்; புதிய பாலம் கட்டி முடித்த பிறகு பழைய பாலத்தை இடிக்க வேண்டும் என என்னிடம் மக்கள் கோரிக்கை வைத்தனா்.
அதை ஏற்று திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளா் திவ்யகாந்த் சந்திரகா், கோட்ட ரயில்வே அதிகாரிகளை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசி, மக்களின் கோரிக்கையை வலியுறுத்தினேன். இதைத் தொடா்ந்து பாலத்தை இடிக்கும் பணியை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களின் கருத்துகளை கேட்டறிந்து புதிய பாலம் அமைக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளாா்.
