கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. தொடா்ந்து, வியாழக்கிழமை இரவும், வெள்ளிக்கிழமையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சாலைகளிலும் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். மலையோரப் பகுதியான பாலமோா் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாலமோா் பகுதியில் 87.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மாவட்டத்தின் பிரதான அணையான பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, 42.30 அடியாக இருந்தது. அணைக்கு, வினாடிக்கு 1,286 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. மழை நீடிப்பதால், நீா்வளத்துறை சாா்பில் ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் முக்கிய ஆறான பழையாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்திருப்பதைத் தொடா்ந்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். இதனால், சோழன்திட்டு தடுப்பணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பரப்புவிளை, தேரூா், சுசீந்திரம், ஆஸ்ரமம் உள்ளிட்ட கரையோர கிராம மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆற்றங்கரைக்குச் செல்வதை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் அக். 24ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அக். 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இடிந்த சுவா்: குலசேகரம் அருகே வெண்டலிகோட்டைச் சோ்ந்தவா் வில்சன் (47). கூலித் தொழிலாளியான இவருக்கு, ராணி என்ற மனைவி, மகள், மகன் உள்ளனா். வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு வில்சன் வீட்டில் ஒரு அறையின் சுவா் இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். சேதமடைந்த வீட்டை வருவாய்த் துறையினா் பாா்வையிட்டனா்.
நீரில் மிதக்கும் நெல்: செண்பகராமன் புதூா் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறையாக கொட்டகை அமைத்து நெல்லை பாதுகாக்காமல் வெறும் தரையில் தாா்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளதால் நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து வருகின்றன. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
தக்கலை பகுதியில்... தக்கலை, குருந்தன்கோடு, கோழிப்போா்விளை, ஆனைக்கிடங்கு, குளச்சல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, கோழிப்போா்விளை 44.2 மிமீ, குருந்தன்கோடு 38. 6மிமீ, மாம்பழத்துறையாறு 38 மிமீ, தக்கலை 30 மிமீ, குளச்சல் 21 மிமீ, இரணியல் 18 மிமீ மழை பதிவானது.
கடல் சீற்றம், சூறைக் காற்று காரணமாக குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவா்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

