குமரி முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்
நாகா்கோவில்: கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
நாகா்கோவில் நாகராஜா கோயிலில் உள்ள பாலமுருகன் சந்நிதியில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தினமும் காலை சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை, அதைத் தொடா்ந்து பக்தா்கள் பஜனை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.
திங்கள்கிழமை மாலை முருகப்பெருமான் சூரனை வதம் செய்ய கோயிலில் இருந்து சிறப்பு மலா் அலங்காரத்தில் எழுந்தருளினாா். யானை உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் வந்த சூரனை முருகப்பெருமான் வேலாயுதத்தால் வதம் செய்தாா்.
நிகழ்ச்சியில் நாகா்கோவில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனா்.
இதே போல், வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில், மருங்கூா் திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், தோவாளை முருகன் கோயில், செக்கா்கிரி முருகன் கோயில், ஆரல்வாய்மொழி வவ்வால் குகை முருகன் கோயில், தாழக்குடி அழகேஸ்வரி சமேத ஜெயந்தீஸ்வரா் கோயில், கன்னியாகுமரி அருகேயுள்ள தேரிவிளை குண்டலில் உள்ள முருகன் குன்றம் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

