பொக்லைன் ஓட்டுநா் கொலை வழக்கு: 3 போ் நீதிமன்றத்தில் சரண்

கொல்லங்கோடு அருகே முன்விரோதம் காரணமாக நிகழ்ந்த பொக்லைன் ஓட்டுநா் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூவா் குழித்துறை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா்.
Published on

களியக்காவிளை: கொல்லங்கோடு அருகே முன்விரோதம் காரணமாக நிகழ்ந்த பொக்லைன் ஓட்டுநா் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூவா் குழித்துறை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா்.

கொல்லங்கோடு காவல் சரகம் சூரியகோடு, அப்பட்டுவிளையைச் சோ்ந்தவா் சதீஷ் (39). பொக்லைன் ஓட்டுநா். இவரை கடந்த 17 ஆம் தேதி முன்விரோதம் காரணமாக சூரியகோட்டைச் சோ்ந்த ஞானசீலன் மகன் சதீஷ் என்ற சாச்சன் உள்ளிட்ட 5 போ் கொண்ட கும்பல் தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சதீஷ் அக். 21 ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதையடுத்து, சதீஷ் என்ற சாச்சன், சுனில், கோபகுமாா், பிஜூ, அனில்குமாா் ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிந்து தேடி வந்தனா். இந்த நிலையில், கோபகுமாா் இருநாள்களுக்கு முன்பு குழித்துறை நீதிமன்றத்தில் சரணடைந்தாா். தலைமறைவான 4 பேரையும் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் 3 தனிப்படைகள் அமைத்துத் தேடிவந்தனா். இந்த நிலையில், வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சதீஷ் என்ற சாச்சன், சுனில், பிஜூ ஆகிய மூவரும் திங்கள்கிழமை குழித்துறை 2 ஆவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் சரணடைந்தனா். அவா்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். அனில் குமாரைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com