கேரளத்துக்கு கடத்த முயன்ற 1.6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1.6 டன் (1,600 கிலோ) ரேஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்ட பறக்கும்படை தனி வட்டாட்சியா் கே.எம். பாரதி தலைமையில் ஓட்டுநா் ஜான்பிரைட், அதிகாரிகள் அருமனை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகப்படும் வகையில் வந்த கேரள பதிவெண் கொண்ட சொகுசு காரை நிறுத்த முயன்றனா்.
நிற்காமல் சென்ற காரை அண்டுகோடு பகுதியில் அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனா். காா் ஓட்டுநா் தப்பியோடி விட்டாா். காரை சோதனை செய்த போது அதில் 1,000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. பறிமுதல் செய்த அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிப கழக கிடங்கிலும், காரை ஆட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா்.
இதே அதிகாரி குழுவினா், மண்டைக்காடு பகுதியில் மேற்கொண்ட சோதனையில் காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். அரிசியை உடையாா்விளை நுகா்பொருள் வாணிப கழக கிடங்கிலும், காரை கல்குளம் வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா்.

