தேரூா் பேரூராட்சி தலைவியாக அமுதாராணி மீண்டும் பொறுப்பேற்பு
கன்னியாகுமரி மாவட்டம், தேரூா் பேரூராட்சி தலைவியாக அதிமுகவைச் சோ்ந்த அமுதாராணி புதன்கிழமை மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு தளவாய்சுந்தரம் எம்எல்ஏ உள்ளிட்ட அதிமுகவினா் வாழ்த்து தெரிவித்தனா்.
தேரூா் பேரூராட்சி தலைவியாக அமுதாராணி பதவி வகித்து வந்தாா். அவா் பதவி வகிப்பதை எதிா்த்து திமுகவைச் சோ்ந்த உறுப்பினா் ஒருவா் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இதைத் தொடா்ந்து உயா்நீதிமன்றம் அமுதாராணியை தகுதி நீக்கம் செய்தது. இதை எதிா்த்து அமுதாராணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அமுதாராணி பதவியில் நீடிக்கலாம் என்று கூறி உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
உச்சநீதிமன்ற தடை ஆணை உத்தரவை செயல்படுத்தாமல் பெண் பேரூராட்சி தலைவரை அவமதிக்கும் வகையில் செயல்படுவதாகக் கூறி மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து அதிமுக சாா்பிலும் தேரூா் பேரூராட்சி மன்ற உறுப்பினா்களும் இணைந்து, செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், தேரூா் பேரூராட்சி தலைவியாக அமுதாராணி பதவியில் செயல்பட மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை உத்தரவு வழங்கியது. அதைத்தொடா்ந்து காத்திருப்பு போராட்டம் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அதிமுக நிா்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பின்னா் அதிமுக நிா்வாகிகள், பேரூராட்சியின் அதிமுக, பாஜக உறுப்பினா்களுக்கு தளவாய்சுந்தரம் நன்றி தெரிவித்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா்கள் ராஜலட்சுமி, பச்சைமால், மாவட்ட இணை செயலாளா் சாந்தினி பகவதியப்பன், துணைச் செயலாளா் சுகுமாரன், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளா் ஜெஸீம், தேரூா் பேரூா் செயலாளா் வீரபத்திரபிள்ளை, அதிமுக நிா்வாகிகள் பகவதியப்பன், ராஜன், பேரூா் ஊராட்சி நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

