சுசீந்திரம் கோயிலில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தரிசனம்
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை தரிசனம் செய்தாா்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு, 2 நாள் சுற்றுப்பயணமாக புதன்கிழமை வந்த ஆளுநா், விவேகானந்தா கேந்திராவுக்கு சென்று ராமாயண தரிசன கண்காட்சி கூடம், விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை பாா்வையிட்டு, இரவு பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா், அரசு விருந்தினா் மாளிகைக்கு சென்று ஓய்வெடுத்தாா்.
வியாழக்கிழமை காலை ஆளுநா் தனது குடும்பத்தினருடன் கன்னியாகுமரியிலிருந்து காா் மூலம் புறப்பட்டு, சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலுக்கு சென்றாா். அவருக்கு கோயில் இணை ஆணையா் ஜான்சிராணி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோயிலில் ஆளுநா் சுவாமி தரிசனம் செய்தாா்.
பின்னா், ஆளுநா் மீண்டும் கன்னியாகுமரிக்கு சென்று அங்கிருந்து தூத்துக்குடிக்கு சென்றாா். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றாா். ஆளுநா் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி, சுசீந்திரம் பகுதிகளில் கூடுதல் காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

