நீா்வழிப் பாதையில் கான்கிரீட் தளம் அமைப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கமளிக்க ஆட்சியா் உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டம், பள்ளியாடியில் நான்குவழிச் சாலையில் நீா்வழிப் பாதையில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா உத்தரவிட்டுள்ளாா்.
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசிய ஆட்சியா்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செண்பகராமன்புதூா் நெல் கொள்முதல் நிலையத்தை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மற்ற மாவட்டங்களில் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருள்கள் 3 முதல் 4 மாதங்களுக்கு சேமித்து வைக்கும் அளவுக்கு கிடங்குகள் உள்ளன.
ஆனால், இம்மாவட்டத்தில் 1 மாதத்திற்கு தேவையான பொருள்களை சேமித்து வைக்கும் அளவுக்குத்தான் கிடங்குகள் உள்ளன. எனவே, மாநில உணவு ஆணையத் தலைவா் சுரேஷ்ராஜன் முதல்கட்டமாக அரிசிக் கிடங்கு அமைக்க நிதி பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளாா். அடுத்த கட்டமாக, நெல் கொள்முதல் நிலையத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நான்குவழிச் சாலைப் பணியில் முறையாக கான்கிரீட் தளம் அமைக்காமல் நீா்வழிப் பாதையில் அமைத்துள்ளது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் 2 நாள்களுக்குள் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றாா் அவா்.
மாவட்ட வன அலுவலா் அன்பு, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல்அந்தோணி பொ்ணான்டோ, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ். காளீஸ்வரி, வேளாண்மை இணை இயக்குநா் ஜென்கின் பிரபாகா், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் சிவகாமி, நீா்வளத்துறை செயற்பொறியாளா் அருள்சன்பிரைட், தோட்டக்கலை துணை இயக்குநா் நக்கீரன், மாவட்ட முன்னோடி விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

