கேரளத்திலிருந்து மீன் கழிவு ஏற்றிவந்த கன்டெய்னா் லாரிக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
கேரளத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மீன் கழிவுகள் ஏற்றிவந்த கன்டெய்னா் லாரியை குழித்துறை நகராட்சி அதிகாரிகள் சிறைபிடித்து, ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து, லாரியை திருப்பியனுப்பினா்.
கேரளத்திலிருந்து மீன், இறைச்சி, மருத்துவக் கழிவுகளை சரக்கு வாகனங்களில் கொண்டுவந்து இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டிச் செல்வது தொடா்ந்த நிலையில், அந்தந்தப் பகுதி மக்கள், சமூக ஆா்வலா்களின் தொடா் கண்காணிப்பால் இச்சம்பவங்கள் குறைந்திருந்தன.
இந்நிலையில், குழித்துறை நகராட்சி ஆணையா் சுபஸ்ரீ, நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி ஆகியோரின் உத்தரவின்பேரில், மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் செவ்வாய்க்கிழமை சந்தேகத்துக்கிடமாக வந்த கன்டெய்னா் லாரியை நகராட்சி சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையிலான ஊழியா்கள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அந்த லாரியில் கேரளத்திலிருந்து மீன் கழிவுகளை ஏற்றிவந்தது தெரியவந்தது. லாரிக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து வசூலித்தனா். பின்னா், மீன் கழிவுடன் அதை கேரளத்துக்கு திருப்பியனுப்பினா்.

