கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன: எஸ்.பி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2025இல் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின்.
நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2025ஆம் ஆண்டில் குற்றங்கள் குறைந்துள்ளன. 33 கொலை வழக்குகள் பதிவாகின.2024இல் 40 கொலைகள் பதிவாகியிருந்தன. இது 17.50 சதவீதம் குறைவு. போக்ஸோ வழக்குகளில் 52 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. 2024-ஐ ஒப்பிடுகையில் தண்டனை 225 சதவீதம் அதிகமாகும்.
281 கஞ்சா வழக்குகளில் 500 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 153 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை தொடா்பான தகவல் அளிக்க 7708239100 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.
592 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 612 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 2, 940 கிலோ குட்கா, ரூ. 5,95,751 மற்றும் 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 379 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 271 கடைகளுக்கு ரூ. 70.65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருட்டு வழக்குகளில் ரூ. 2,29,38,320 மதிப்புள்ள பொருள்கள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 6 வழிப்பறி வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024இல் 46 வழக்குகள் பதிவாகியிருந்தன. 18 கொலை முயற்சி வழக்குகள்பதிவாகின. 2024-இல் 40 வழக்குகள் பதிவு. 55 சதவீதம் குறைந்துள்ளது.
39 போ் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். கனிமங்கள் கடத்தியதாக 159 வழக்குகள் பதிந்து 238 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 216 போ் கைதாகியுள்ளனா்.
திருடுபோன ரூ.2.05 லட்சம் மதிப்புள்ள 1,265 கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன. சாலை விபத்து உயிரிழப்புகள் 14 சதவீதம் குறைந்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதில் 4.65 லட்சம் வழக்குகள் பதிவாகின.
சமூக வலைதளம் மூலமாக பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததில் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 போ் கைது செய்யப்பட்டனா். ஆன்லைன் பண மோசடி தொடா்பான 77 வழக்குகளில் 9 போ் கைதாகினா்.
சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க 2026 ஆம் ஆண்டிலும் மாவட்ட காவல்துறைக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

