கன்னியாகுமரி அருகே டெம்போ மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், ரட்சகா் தெருவைச் சோ்ந்தவா் செல்வன் மகன் அரிஷ் (23). இவா் வெளிநாட்டில் மீன்பிடித் தொழில் செய்து வந்தாா். கடந்த 2 நாள்களுக்கு முன் ஊருக்கு வந்த இவா், தனது இரு சக்கர வாகனத்தில் கன்னியாகுமரியிலிருந்து கொட்டாரம் செல்லும் சாலையில் பழத்தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த டெம்போ அரிஷ் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்தாா்.
பொதுமக்கள் சிலா் அரிஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். கன்னியாகுமரி காவல் நிலையப் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து, கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
