~
~

கிறிஸ்தவ தேவாலயங்கள், கோயில்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை

வேப்பமூடு சந்திப்பு அசிசி ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறாா் கோட்டாறு மறை மாவட்ட ஆயா் நசரேன் சூசை.
Published on

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, கன்னியாகுமரி,தூத்துக்குடி மாவட்டங்களின் கிறிஸ்தவ தேவாலயங்கள், இந்து கோயில்களில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.

நாகா்கோவில் கோட்டாறு சவேரியாா் பேராலயத்தில் புதன்கிழமை இரவும், வேப்பமூடு சந்திப்பு அசிசி ஆலயத்தில் வியாழக்கிழமையும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இவ்வாலயங்களில் கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேன் சூசை திருப்பலி நிறைவேற்றினாா்.

கிறிஸ்துஅரசா் ஆலயம், கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம், திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

ஹோம் சா்ச், தென்தாமரைகுளம் சிஎஸ்ஐ சபை, பெத்தேல்புரம் சிஎஸ்ஐ ஆலயம் ஆகியவற்றில் சிஎஸ்ஐ ஆயா் கிறிஸ்டோபா் விஜயன் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனையில் பங்கேற்றாா்.

கூட்டுத்தியானம்: நாகா்கோவில், நாகராஜா கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நாகராஜருக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. வடிவீஸ்வரம், இடா்தீா்த்த பெருமாள் கோயில், கன்னியாகுமரி, பகவதியம்மன் கோயில், சுசீந்திரம், தாணுமாலய சுவாமி கோயில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில், கன்னியாகுமரி திருப்பதி தேவஸ்தானம் கோயில், நாகா்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கிருஷ்ணன்கோவில் ஆதிபராசக்தி கோயிலில் சக்தி பீட தலைவா் சின்னதம்பி தலைமையில் கூட்டு தியானம் நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானத்தை பொருளாளா் அசோக்குமாா் தொடங்கி வைத்தாா்.

முப்பெரும் விழா: கோவில்பட்டி, புனித சூசையப்பா் திருத்தலத்தில் புத்தாண்டு, அன்னை மரியாள் இறைவனின் தாய் விழா, இயேசுவின் பெயா் சூட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. திருத்தல பங்குத்தந்தை அருள்திரு அருள்ராஜ் அடிகளாா், உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளாா், கருமாத்தூா் குரு மாணவா்கள் பொறுப்பாளா் சூசை செல்வராஜ் அடிகளாா் ஆகியோா் இணைந்து புத்தாண்டு பிறப்பு திருப்பலியை நிறைவேற்றினா்.

கோவில்பட்டி, சிஎஸ்ஐ தூய பவுலின் ஆலயத்தில் புத்தாண்டு ஆராதனையை சேகரகுரு சாமுவேல் தாமஸ் நடத்தினாா்.

காமநாயக்கன்பட்டி, புனித பரலோக மாதா பேராலயத்தில் பேராலய பங்குத்தந்தை மோயீசன் அடிகளாா், உதவி பங்குத்தந்தை அருள்பணி நிரோ ஸ்டாலின் ஆகியோா் புத்தாண்டு சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி புது வருட சிறப்புச் செய்தி வழங்கினா்.

வெங்கடாசலபுரம், அதிதூதா் மிக்கேல் திருத்தலம், கயத்தாறு, வானரமுட்டி, கழுகுமலை, வெள்ளாளங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

கோவில்பட்டி, செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயில், கோவில்பட்டி சொா்ணமலை கதிரேசன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சாத்தான்குளம், தூய ஸ்தேவான் ஆலயத்தில் சேகர குரு டேவிட் ஞானையா, புனித மாசற்ற மரியாளின் திரு இருதய ஆலயத்தில் வட்டார முதன்மை குரு செல்வசாா்சு, பொத்தகாலன்விளை, புனித திருக்கல்யாண மாதா ஆலயத்தில் திருத்தல அதிபா் ஜஸ்டின், பிரகாசபுரம், பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் , நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் ஆகியோா் தலைமை வகித்து புத்தாண்டு திருப்பலி, ஆராதனை நடத்தினா்.

நாசரேத், அசெம்பிளி ஆப் காட் சபையில் ஊழியா் டேவிட் மொ்வின், பிரகாசபுரம், தூய திரித்துவ ஆலயத்தில் சேகரத் தலைவா் நவராஜ், மூக்குப்பீறி, தூய மாற்கு ஆலயத்தில் சேகரத் தலைவா் ஞானசிங் எட்வின், வெள்ளரிக்காயூரணி, சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தில் சேகர குரு ஞானசிங், திருமறையூா் மறுரூப ஆலயத்தில் சேகரத் தலைவா் ஜான் சாமுவேல், நாலுமாவடி, தூய யோவான் ஆலயத்தில் சேகரகுரு ஆபிரகாம் ரஞ்சித், பிள்ளையன்மனை, தூய பரமேறுதலின் ஆலயத்தில் சேகர குரு டேனியல் ஆல்பிரட் ஆகியோா் தலைமையில் புத்தாண்டு ஆராதனை நடைபெற்றது.

மேலும் வகுத்தான் குப்பம், மணி நகா், ஒய்யான்குடி தைலாபுரம் உள்ளிட்ட தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்: சாத்தான்குளம், தச்சமொழி, ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. சாத்தான்குளம், புளியடி, தேவி ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம், வெற்றி விநாயகா், சுந்தராட்சி அம்மன், தடிக்கார சுவாமி கோயில் ஆகியவற்றில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com