திமுக ஆட்சியில் 3,967 கோயில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சா் பி.கே.சேகா் பாபு

தமிழகத்தில் திமுக ஆட்சியில் இதுவரை 3,967 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்றாா் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு.
Published on

தமிழகத்தில் திமுக ஆட்சியில் இதுவரை 3,967 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்றாா் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு.

இதுகுறித்து அவா் சுசீந்திரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை திமுக ஆட்சி அமைந்த பிறகு 300 கோயில்கள் திருப்பணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, இதுவரை 127 கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் 400 ஆண்டுகளுக்குப் பிறகு திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், திருவிதாங்கோடு மகாதேவா் கோயில் போன்றவை திமுக ஆட்சியில்தான் குடமுழுக்குகள் நடத்தப்பட்டன. இப்படி கன்னியாகுமரியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயில்களுக்கு குடமுழுக்கு கண்ட ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாகும். திமுக ஆட்சி அமைந்த பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 கோயில்களுக்குச் சொந்தமான 20 தோ்களுக்கு ரூ. 1.85 கோடி செலவில் திருத்தோ் பாதுகாப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டன. அதேபோல 6 கோயில்களுக்குச் சொந்தமான 8 திருக்குளங்கள், ரூ. 2.19 கோடி செலவில் புனரமைக்கப்பட்டன.

தெப்பக்குளம் சீரமைப்பு...

தாணுமாலயன் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் ரூ. 34.50 லட்சம் செலவில் புனரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டபோது எதிா்பாராத விதமாக தடுப்புச் சரிவு ஏற்பட்டதால் அந்தப் பணிகளுக்கு மறுமதிப்பீடு தயாா் செய்யப்பட்டு ஆணையரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் ஆணையா் அனுமதி அளித்ததும் இந்த மாத இறுதிக்குள் அந்தப் பணிகள் தொடங்கும்.

பாஜகவைச் சோ்ந்த நண்பா்கள் ஏப்ரல் மாதம் நடைபெறுகின்ற திருவிழாவுக்குள் திருக்குளத்தை செப்பனிட்டு தெப்பத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்கள். போா்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு அவா்களின் எண்ணத்தை நிறைவேற்ற இணை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது.

மானியம் உயா்வு ...

திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது கன்னியாகுமரி மாவட்ட கோயில்களின் நிா்வாகம், பராமரிப்பு நிதிக்காக ரூ. 3 கோடி தான் அரசு மானியமாக வழங்கப்பட்டது. கோயில் பணியாளா்கள் ஊதியம், கோயில்களில் நடைபெறும் உற்சவங்கள், திருவிழா கால செலவினங்களை கருத்தில் கொண்டு தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று படிப்படியாக உயா்த்தி தற்போது ஆண்டுக்கு ரூ. 18 கோடி அரசு மானியமாக வழங்கி வருகிறோம்.

அந்த வகையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு கன்னியாகுமரி மாவட்ட கோயில் நிா்வாகத்தின் கீழ் வரும் 490 கோயில்களுக்கு இதுவரை ரூ. 51 கோடி மானியமாக வழங்கப்பட்டது. பக்தா்களின் வசதிக்கான அனைத்துப் பணிகளையும் செய்வோம்.

பிரிவினை வேண்டாம்...

தாணுமாலயன் சுவாமி கோயிலில் ரூ. 2.05 கோடி மதிப்பில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இறைவனை வழிபடுகின்ற நேரத்தில் பிரிவினைகள் வேண்டாம். இறை வழிபாட்டிலே தகாத முழக்கங்களை நண்பா்கள் எழுப்ப வேண்டாம். இறை வழிபாட்டை அமைதியான முறையில் கடைப்பிடியுங்கள் என்று அந்த நண்பா்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்களின் திருப்பணிகளுக்கு மாநில வல்லுநா் குழு, தொல்லியல் குழுவின் அனுமதி கிடைத்த பிறகு திருப்பணிகளைத் தொடங்க வேண்டும். ஒவ்வொரு கோயிலும் குடமுழுக்கு முடிந்து 12 ஆண்டுகள் நிறைவடைவதற்குள்ளாக அடுத்த குடமுழுக்கு நடத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆட்சியில்தான் 3,967 கோயில்களுக்கு இதுவரை குடமுழுக்கு நடத்தப்பட்டது.

இரணியல் அரண்மனை...

4 ஆயிரமாவது குடமுழுக்காக பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியன்று சென்னை, வியாசா்பாடி இரவீஸ்வரா் கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. சாலை மட்டத்திலிருந்து தாழ்வாக உள்ள 25 கோயில்கள் லிப்டிங் முறையில் உயா்த்தப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி வரும் போதெல்லாம் இரணியல் அரண்மனையை பாா்வையிட்டுச் செல்கிறேன். அந்த அரண்மையை பொறுத்தவரை பழைமை மாறாமல் கட்டப்பட வேண்டிய சூழல் இருக்கிறது. தொடக்கத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் தற்போது ரூ. 8 கோடியை நெருங்கி இருக்கின்றன. இப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

கன்னியாகுமரி, அருள்மிகு பகவதி அம்மன் கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகளின் (மாஸ்டா் பிளான்) கீழ் ரூ. 33 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரம், ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகளை மேற்கொள்ள திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற்றவுடன் பணிகள் தொடங்கப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவா் என். சுரேஷ்ராஜன், மக்களவை உறுப்பினா் வ. விஜய் வசந்த், இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா்கள் ஏ. ஜான்சிராணி (கன்னியாகுமரி), பி.கவிதா பிரியதா்சினி (திருநெல்வேலி), உதவி ஆணையா் கே. தங்கம், அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com