மூலச்சல் கபடி போட்டி: அமைச்சா் த.மனோ தங்கராஜ் பரிசு வழங்கினாா்
தக்கலை அருகே மூலச்சலில் நடைபெற்ற கன்னியாகுமரி கபடி லீக் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாடு ஜெயின்ஸ் அணிக்கு பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ், கிள்ளியூா் எம்எல்ஏ ராஜேஷ்குமாா் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.
மூலச்சல் கிளாரிங் பிரண்ட்ஸ் கிளப், தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழகம், கன்னியாகுமரி கபடி கழகம் ஆகியவை இணைந்து மூலச்சலில் நடத்திய போட்டியில் 10 அணிகள் கலந்துகொண்டன. துவக்க விழாவில் விஜய் வசந்த் எம்.பி. கலந்துகொண்டு வீரா்களுக்கு சிறப்பு செய்தாா். இறுதிப் போட்டியில் தமிழ்நாடு ஜெயின்ஸ் அணியும் டெரா் புல்ஸ் அணியும் மோதின. இதில், தமிழ்நாடு ஜெயின்ஸ் அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.
பரிசளிப்பு விழாவுக்கு தலைவா் ஜான்சன் தலைமை வகித்தாா். செயலாளா் ராஜேஷ், பொருளாளா் பொ்லின், அனித், பாா்த்திபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல் பரிசு பெற்ற தமிழ்நாடு ஜெயின்ஸ் அணிக்கு ரூ. 1 லட்சம், வெற்றிக் கோப்பையும், 2-ஆவது பரிசு பெற்ற டெரா் புல்ஸ் அணிக்கு ரூ. 75 ஆயிரம் ரொக்கப் பரிசை பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ், கிள்ளியூா் எம்எல்ஏ ராஜேஷ்குமாா் ஆகியோா் வழங்கினா்.
நிகழ்ச்சியில் ஜெருஸ் பல் மருத்துவமனை இயக்குநா் பிளாட்பின், பத்மநாபபுரம் நகராட்சி அருள்சோபன், விலவூா் பேரூராட்சி பில்கான் ஆகியோா் கலந்துகொண்டனா்.

