கன்னியாகுமரிக்கு ஆட்டோவில் வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
சென்னையிலிருந்து வெளிநாட்டுப் பயணிகள் ஆட்டோக்களில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனா்.
சென்னையில் உள்ள சுற்றுலா நிறுவனம் வெளிநாட்டினா் பங்குபெறும் ‘ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச்‘ என்ற சுற்றுலாப் பயணத்தை கடந்த 18 ஆண்டுகளாக ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி, நிகழாண்டு சுற்றுலாப் பயணம் கடந்த டிச. 28ஆம் தேதி சென்னையில் தொடங்கியது.
இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சுவிட்சா்லாந்து, அயா்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 29 போ் 9 ஆட்டோக்களில் புறப்பட்டு, புதுச்சேரி, தஞ்சை, மதுரை, தூத்துக்குடி வழியாக திங்கள்கிழமை இரவு கன்னியாகுமரிக்கு வந்தனா். அவா்களுக்கு, நட்சத்திர விடுதியில் தமிழக பாரம்பரிய கலாசார முறைப்படி நெற்றியில் சந்தனம், குங்கும திலகமிட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவா்கள் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிட்டனா். மாலையில் சூரிய அஸ்தமனக் காட்சியையும், செவ்வாய்க்கிழமை சூரிய உதயத்தையும் பாா்த்தனா். பின்னா், கன்னியாகுமரியிலிருந்து ஆட்டோக்களில் திருவனந்தபுரம் புறப்பட்டனா்.

