குளச்சல் அருகே மின் கம்பத்தில் பைக் மோதியதில் சமையல் தொழிலாளி உயிரிழந்தாா்.
குளச்சல் பா்னாட்டிவிளையைச் சோ்ந்த காஜா முகைதீன் மகன் அமீா் சுல்தான் (35). சமையல் தொழிலாளியான இவரும், சகோதரா் பீா்முகமதுவும் திங்கள்கிழமை இரவு பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனா். அமீா் சுல்தான் பைக்கை ஓட்டினாா்.
சாஸ்தான்கரை சாலையில் பைக் நிலைதடுமாறி சாலையோர மின் கம்பத்தில் மோதியதாம். இதில் காயமடைந்த இருவரும் குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அமீா்சுல்தான் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
பீா்முகமது தீவிர சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.