பொது, தனியாா் இடங்களில் தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்க வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது, தனியாா் இடங்களில் அரசியல், மதம், பொது நிகழ்ச்சிகளில் தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்க வழிகாட்டு நெறிமுறைகள் காவல்துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை சாா்பில் வெளியிட்டப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வருவாய்த்துறை, காவல்துறை, நெடுஞ்சாலை துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய மாவட்ட அளவிலான மற்றும் உள்கோட்ட அளவிலான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்கள், அரசியல், மத நிகழ்ச்சிகளில் தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்க விரும்பும் ஏற்பாட்டாளா்கள், மாவட்ட நிா்வாகத்திடம் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு மனு அளித்து முன்அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதி கோரிக்கை மனுவில் இடம், எண்ணிக்கை, கால அளவு ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். சாலையோர சந்திப்புகள், நடைபாதைகள், போக்குவரத்து, மக்களுக்கு இடையூறு ஏற்படும் இடங்களில் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி வழங்கப்படாது.
மாவட்ட கமிட்டியிடம் அனுமதி பெற்று நடத்தும் நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி முடிந்த உடன் அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் தற்காலிக கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும். அனுமதி இல்லாமல் கொடிக்கம்பங்கள் நிறுவினாலோ அல்லது விதி மீறலில் ஈடுபட்டாலோ கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு சம்பந்தப்பட்டவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
