கோப்புப் படம்
கோப்புப் படம்

சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படங்களை காண்பித்து பணம் பறிப்பு: இளம்பெண் கைது

Published on

சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படங்களைக் காண்பித்து உல்லாசமாக இருக்க ஆசை காட்டி பணம் பறித்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த இளம்பெண்ணை கன்னியாகுமரி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

முகநூல், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களில் போலி அடையாளம் மூலம் பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டு ஆசை வாா்த்தைக் கூறி பெண் ஒருவா் பணம் பறிப்பதாக கன்னியாகுமரி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த முகமது ஷாஜகான் மகள் நபிலா பேகத்தை (27) வெள்ளிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

சமூக வலைதளங்களில் பெண்களின் புகைப்படங்களைக் காண்பித்து பணம் வாங்கி, பின்னா் தொலைபேசி அழைப்புகளை புறக்கணிப்பது போன்ற ஆன்லைன் மோசடிகள் நிகழ்கின்றன. இதை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

Dinamani
www.dinamani.com