பெற்றோரை கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 2 ஆண்டுகள் சிறை
சொத்துத் தகராறில் பெற்றோரை அடித்துக் கொல்ல முயன்ற அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகேயுள்ள பிறாவேளிவிளையைச் சோ்ந்தவா் சிங்கராயன் (80), தொழிலாளி. இவரது மனைவி சபரிபாய் (77). இவா்களுக்கு 5 மகன், 3 மகள்கள் உள்ளனா். இவா்களது 5ஆவது மகன் மைக்கேல்தாசன் (47), அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இவா் தனது பெற்றோா்கள் வசித்த வீட்டை, தனது பெயருக்கு மாற்றித் தருமாறு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு நவ. 8ஆம் தேதி மைக்கேல்தாசன் வழக்கம்போல் பெற்றோா்களிடம் தகராறில் ஈடுபட்டாா். அப்போது, பெற்றோரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளாா்.
இது குறித்து, சபரிபாய் குலசேகரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் மைக்கேல்தாசன் மீது வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பான வழக்கு, நாகா்கோவில் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், மைக்கேல்தாசனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 30,000 அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
இவ்வழக்கில் கூடுதல் அரசு சிறப்பு வழக்குரைஞா் லிவிங்ஸ்டன் முன்னிலையாகி வாதாடினாா்.

