கடையம் அருகே லாரி மோதி 3 மாடுகள் பலி
By DIN | Published On : 12th August 2020 01:30 PM | Last Updated : 12th August 2020 01:30 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
கடையம் அருகே லாரி மோதியதில் 3 எருமை மாடுகள் பலியானதால் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் மாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். செவ்வாய்கிழமை இரவு குற்றாலத்திலிருந்து எருமை மாடுகளை ரவணசமுத்திரத்திற்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது தீர்த்தாரப்பபுரத்தில் உள்ள தனியார் குவாரியிலிருந்து தென்காசிக்கு ஜல்லி ஏற்றிச் சென்ற லாரி மாதாபுரம் அருகே வந்த போது எதிர்பாராமல் மாடுகள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில் மூன்று எருமை மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரழந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடையம் காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்து வண்டி ஓட்டுநரான சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த ராஜாமணி மகன் செல்வத்தை கைது செய்தனர். இதுகுறித்து கடையம் காவல் உதவி ஆய்வாளர் காஜாமுகைதீன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கடையம் பகுதியிலிருந்து குவாரிகளிலிருந்து ராட்சத டாரஸ் லாரிகள் மூலம் விதியை மீறி அதிகளவு பாரத்துடன் செல்வதால் சாலை சேதமடைவதோடு அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
மேலும் வரையறுக்கபட்ட நேரத்தை விட இரவு நேரங்களிலும் இந்த லாரிகள் இயங்குகின்றன. இதுகுறித்து அதிகாரிகளுக்கு பல முறை தெரியப்படுத்தியும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொது மக்கள் தெரிவித்தனர்.