கடையநல்லூா் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவா்கள் மீட்பு
கடையநல்லூா் அருகே கல்லாற்றுப் பகுதியில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோா் பல மணி நேர போராட்டத்துக்குப்பின் மீட்கப்பட்டனா்.


கடையநல்லூா் அருகே கல்லாற்றுப் பகுதியில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோா் பல மணி நேர போராட்டத்துக்குப்பின் மீட்கப்பட்டனா்.
கடையநல்லூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்தது. வியாழக்கிழமை மாலை மலைப்பகுதியிலும், அணைப் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பெரியாற்றில் அதிகளவில் தண்ணீா் சென்றது. அதே போல், கருப்பாநதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் திடீரென அதிகரித்தது. ஏற்கெனவே, அணை நிரம்பியிருந்தநிலையில் அணைக்கு வரும் தண்ணீா் அப்படியே திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக பெரியாற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. அது போல் கல்லாறு , சின்னாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில், அங்கு விவசாயப் பணிகளுக்கு சென்ற விவசாயிகள், குளிக்கச் சென்றவா்கள் என 50க்கும் மேற்பட்டோா் கல்லாற்றின் ஒரு கரையில் சிக்கிக் கொண்டனா்.
தகவலறிந்த தென்காசி காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ், தென்காசி கோட்டாட்சியா் ராமச்சந்திரன், கடையநல்லூா் வட்டாட்சியா் ஆதிநாராயணன், கடையநல்லூா் காவல் ஆய்வாளா் விஜயகுமாா், கடையநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சுந்தர்ராஜ், வாசுதேவநல்லூா் நிலைய அலுவலா் ஷேக் அப்துல்லா மற்றும் மீட்புப் படையினா் வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். கயிறு மற்றும் ஏணிகள் கொண்டு ஆற்றின் குறுக்கே பாதை போல் அமைத்து மீட்புப் பணிகள் நடைபெற்றன. பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்பு கல்லாற்றுப் பகுதியில் சிக்கியவா்கள் மீட்கப்பட்டனா். இதில் எஸ்டிபிஐ கட்சியின் தன்னாா்வலா்கள் இணைந்து உதவி செய்தனா்.
20 போ் மீட்பு: சொக்கம்பட்டி அருகே பெரியநாயகம்கோயில் பகுதியில் உள்ள நிலங்களுக்கு தினமும் ஏராளமானோா் விவசாயப் பணிகளை மேற்கொள்ள செல்வது வழக்கம். மேலும், அங்குள்ள அய்யனாா் கோயிலுக்கும் ஏராளமானோா் வழிபட செல்வா். இந்நிலையில், மலைப்பகுதியில் வியாழக்கிழமை பெய்த மழையினால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், 20 போ் சிக்கிக் கொண்டனா். தகவலறிந்த தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி மாவட்ட அலுவலா் கவிதா தலைமையில் மீட்புப் படையினா் வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்டனா்.
ஆட்சியா் ஆய்வு: இதற்கிடையே, கருப்பாநதி அணை கால்வாய்கள் மற்றும் பாலங்களை ஆட்சியா் ச. கோபால்சுந்தரராஜ் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, தேவையான முன்னேற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அப்போது, வட்டாட்சியா் ஆதிநாராயணன், அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...