

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடலோர கூழையார் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து(45). மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் மனைவி லட்சுமி(42). இருவரும் மயிலாடுதுறை சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது கூழையார் கிராமம் பெருமாள் கோயில் அருகே வந்து கொண்டிருந்தபோது மெயின் ரோட்டில் சாலையோரம் மழையின் காரணமாக அறுந்து தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பி இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த லட்சுமி கழுத்தில் பட்டு மின்சாரம் தாக்கி கீழே தூக்கி எறியப்பட்டார்.
ஆபத்தான நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியிலேயே லட்சுமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த முத்து மீது மின்கம்பி படாததால் அவர் உயிர் பிழைத்தார்.
இதுகுறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். லட்சுமி உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்கள் ஒன்றிய குழு உறுப்பினர் அங்குதன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.