

ஆலங்குளத்தில் உள்ள காமராஜர் சிலையை அகற்றி புதிய இடத்தில் வைக்க அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுமக்கள் கடைகளை அடைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகில் காமராஜர் சிலை சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. தற்போது இந்த பகுதியில் நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு வருவதால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்தச் சிலையை அகற்ற முடிவு செய்தனர். அகற்றப்படும் காமராஜர் சிலைக்கு பதிலாக புதிய வெண்கல சிலையை பேருந்து நிலையம் அருகிலேயே அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
எனினும் அதிகாரிகள் தரப்பில் சிலை நிறுவ போதிய இடம் ஒதுக்கீடு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு பேரவைத் தலைவர் அப்பாவு, தென்காசி எம்எல்ஏ பழனி உள்ளிட்டோர் இப்பகுதியில் ஆய்வு செய்து காமராஜர் சிலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தனர். ஆயினும் தொடர்ந்து சிலை அமைப்பதற்கு இடம் ஒதுக்கீடு செய்வதில் அதிகாரிகள் தொடர்ந்து சுணக்கம் காட்டி வந்தனர்.
இந்த நிலையில் புதிய காமராஜர் சிலை அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆலங்குளம் நகர அனைத்து வியாபாரிகளும் இன்று ஒரு நாள் அடையாளக் கடையடைப்பு நடத்தி ஏற்கெனவே இருக்கும் காமராஜர் சிலை அருகில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
உணவகங்கள் முதல் ஜவுளி மற்றும் மளிகை கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. திரையரங்கு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. சுமார் 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். பாதுகாப்பு பணிக்காக போலீஸார் குவிக்கப்பட்டதால் ஆலங்குளத்தில் பரபரப்பு நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.