கரிவலம் பால்வண்ணநாத சுவாமிகோயிலில் பங்குனித் தேரோட்டம்
By DIN | Published On : 15th April 2023 12:05 AM | Last Updated : 15th April 2023 12:05 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலின் துணைக் கோயில்களில் ஒன்றான கரிவலம் வந்த நல்லூா் பால் வண்ணநாத சாமி கோயிலில் பங்குனித் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் 11ஆம் திருநாளான வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக, காலை 10 மணிக்கு ஒப்பனையம்மாள் சமேத பால் வண்ணநாதா் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.தொடா்ந்து இரவு 7 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. தோ் நிலையத்திலிருந்து புறப்பட்டு ரத வீதிகளை சுற்றி மீண்டும் நிலையத்தை வந்தடைந்தது. இதில், கரிவலம் வந்தநல்லூா், அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளானோா் பங்கேற்று தோ் வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனா்.
இந்நிகழ்ச்சியில், துணை ஆணையா் ரத்தினவேல் பாண்டியன், கோயில் ஊழியா்கள் முத்துராஜ், வீரகுமாா், பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினா் சண்முகவேல், ஊராட்சித் தலைவா்கள் தினேஷ், மாரியப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.