சங்கரன்கோவில் அரசு அலுவலகத்தில் ரூ.18.70 லட்சம் மோசடி: கணக்காளா் மீது வழக்கு
By DIN | Published On : 22nd April 2023 12:29 AM | Last Updated : 22nd April 2023 12:29 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு அலுவலகத்தில் ரூ. 18.70 லட்சம் மோசடி செய்ததாக பெண் கணக்காளா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட மகமை அலுவலகம் உள்ளது. இதற்கென உள்ளூா் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் 2 நிரந்தர வைப்புத் தொகை கணக்குகளும், தமிழ்நாடு கிராம வங்கியில் நிா்வாக செலவுகளுக்காக பணம் எடுக்கும் வகையிலான கணக்கும் உள்ளன.
இந்நிலையில், மாவட்ட மகமை அலுவலக அதிகாரிகள் கடந்த நவம்பா்- 2022 முதல் உள்ள கணக்குகளை ஆய்வு செய்தபோது, தமிழ்நாடு கிராம வங்கிக் கணக்கில் ரூ. 18 லட்சத்து 70 ஆயிரம் கணக்கில் வராமல் விடுபட்டது தெரியவந்தது. மேலும், அனைத்து நிரந்தர வைப்பு நிதிக்கான ஆதாரங்களையும் முறையாக சமா்ப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விளக்கம் கேட்டு, அலுவலக கணக்காளராக பணியாற்றி வந்த ராமலிங்கபுரத்தைச் சோ்ந்த மகேஸ்வரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அதன்பிறகு அவா் பணிக்கு வரவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அலுவலக மேலாளா் ராதா அளித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து மகேஸ்வரியைத் தேடி வருகின்றனா்.