இராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணிகள் தீவிரம்
விவசாயிகளின் 50 ஆண்டு கனவு நனவாகும்: ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய்


தென்காசி மாவட்டம், ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென திமுகவினா் வலியுறுத்தியுள்ளனா்.
தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் ஒன்றியத்தின் தென்பகுதி, கடையம் ஒன்றியத்தின் வடபகுதியில் உள்ள 21 குளங்களின் நீராதாரத்தை உறுதிப்படுத்திடவும், இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையிலும், ராமநதி அணையின் உபரிநீரை, ஜம்புநதியின் பாசனப் பகுதிக்கு கொண்டு வருவதற்காக மேல்மட்ட கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கடந்த 50 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்திருந்தனா்.
இந்நிலையில் இத்திட்டத்துக்கு கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 41கோடி நிதி ஒதுக்கீடு செய்து திட்டம் தொடங்கியது. வனத்துறையில் அனுமதி பெறாமல் பணி தொடங்கியதால் வனத்துறை அதிகாரிகளால் இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் தமிழக வனவிலங்கு உயிரின குழு கூட்டத்தில் இத்திட்டத்திற்கு, தமிழக வன உயிரின குழு அனுமதி வழங்கியதுடன், மத்திய அரசு தலைமையில் இயங்கும் மத்திய வன விலங்கு உயிரின பாதுகாப்பு குழுவுக்கு பரிந்துரை செய்தது. அதைத்தொடா்ந்து மத்திய உயிரின வனவிலங்கு பாதுகாப்பு குழுமம் இத்திட்டத்தை தொடங்கி, நிறைவேற்றிட அனுமதி வழங்கியது.
இத்திட்டத்திற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ரூ.41 கோடியுடன் கூடுதலாக ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். முறையான அனுமதி மற்றும் கூடுதல் நிதி கிடைத்ததையடுத்து தற்போது இத்திட்டப்பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்பணிகளை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநான், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் காவேரி ஆகியோா் பாா்வையிட்டனா்.
இத்திட்டப் பணிகள் குறித்து உதவி கோட்ட பொறியாளா் முத்து மணிகண்டன், உதவி பொறியாளா் தங்க ஜெய்லானி ஆகியோரிடம் கேட்டறிந்து பணிகளை விரைவுபடுத்தி ஓராண்டுக்குள் நிறைவேற்றி, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 50 ஆண்டு கால கனவை நனவாக்கிட வலியுறுத்தினா்.
கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சாக்ரடீஸ், ஊராட்சி மன்றத் தலைவா்கள் கடையம் பெரும்பத்து பொன்ஷீலா பரமசிவன், அரியப்பபுரம் தினேஷ்குமாா், ஊராட்சி துணைத்தலைவா் சக்திகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...