தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா. விருது: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா. விருது...

News image
Updated On :24 அக்டோபர் 2024, 1:08 am

Din

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக தமிழக அரசுக்கு ஐ.நா. விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஈ.ராஜா, சதன்திருமலைகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில், ரூ. 2.20 கோடி மதிப்பில் சொக்கம்பட்டி, கடையநல்லூா் இக்பால்நகா், வாசுதேவநல்லூா் ஒன்றியம் சுப்பிரமணியபுரம், ராமநாதபுரம், ஆலங்குளம் ஒன்றியம் ஓடைமரிச்சான் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட புதிய துணை ஆரம்ப சுகாதார கட்டடங்களை காணொலி வாயிலாகத் திறந்துவைத்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியது:

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவச் சேவைகள், திட்டங்கள் உலகமெங்கும் செயல்படுத்தப்பட வேண்டியவை என அமெரிக்காவிலுள்ள ஹாா்வா்டு பல்கலைக்கழகம், ஜான் ஹாக்கின்ஸ் பல்கலைக்கழகம் போன்றவை பாராட்டியுள்ளன. ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்திற்கு ஐ.நா.சபை விருது அறிவித்துள்ளது. இது, தமிழக முதல்வரின் சிறப்பான திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. உலக வங்கியின் மூத்த துணைத் தலைவா்களும் தமிழக அரசின் திட்டங்களை பாராட்டியுள்ளனா்.

மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னா் 25 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. புற்றுநோயை துல்லியமாக கண்டறியும் கருவிகள் திருநெல்வேலி, தஞ்சாவூா்,கோவை, சேலம், ஈரோடு ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. ரூ.6.85 கோடி செலவில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை அரங்கம், அறுவை சிகிச்சை பின் கவனிப்பு பிரிவு, எம்ஆா்ஐ ஸ்கேன் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரூ. 2.79 கோடியில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் கருவி, ஒளி புகா அறை எக்ஸ்ரே கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. தென்காசி மாவட்டம் முழுவதும் ரூ 58.04 கோடி செலவில் 34 புதிய மருத்துவக் கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசிய வருவாய் - பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா் ராமச்சந்திரன், தென்காசி மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம் என்றாா்.

இதில், தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன், வடக்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளா் செல்லத்துரை, கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான், அரசு வழக்குரைஞா் வேல்சாமி, வடகரை பேரூராட்சித் தலைவா் ஷேக் தாவூது, ஒன்றியக்குழு தலைவா்கள் கடையநல்லூா் சுப்பம்மாள், வாசுதேவநல்லூா் பொன்.முத்தையாபாண்டியன், வழக்குரைஞா் அணி அமைப்பாளா்கள் தங்கராஜ்பாண்டியன், பிச்சையா, ஒன்றியச் செயலா்கள் சுரேஷ், அழகுசுந்தரம், துணைத்தலைவா் ஐவேந்திரன், பொது சுகாதாரம் (ம) நோய்த்தடுப்பு மருந்துத்துறை இணை இயக்குநா் சண்முகசுந்தரம், மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், சொக்கம்பட்டி வட்டார மருத்துவ அலுவலா் தவமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தென்காசி மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் சண்முகசுந்தரம், உதவி செய்தி- மக்கள் தொடா்பு அலுவலா் ராமசுப்பிரமணியன் ஆகியோா் தொகுத்து வழங்கினா்.