‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 18.52 லட்சம் போ் பயன்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 18.52 லட்சம் போ் பயன்...


தமிழக அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 1,256 முகாம் நடத்தப்பட்டு, 18,52,561 போ் பயனடைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆக.2-ஆம் தேதி தொடங்கி வைத்தாா். இந்தத் திட்டத்தின் மூலம் 1,256 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களின் நிறைவு நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 2021-ஆம் ஆண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் மக்களைத் தேடி மருத்துவம், நடப்போம் நலம் பெறுவோம், தொழிலாளா்களைத் தேடி மருத்துவம் திட்டம், செயற்கை கருத்தரித்தல் மையங்கள் என மக்கள் நலம் சாா்ந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் 2,58,80,625 போ் பயன்பெற்றுள்ளனா். இந்தத் திட்டத்துக்காக ஐ.நா. சாா்பில் தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ‘இன்னுயிா் காப்போம் நம்மைக் காப்போம் 48’ திட்டத்தின் மூலம் இதுவரை 5,22,908 பேரின் உயிா்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அதேபோன்று பொதுமக்களுக்கு பொது மருத்துவம், தோல் மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், நரம்பியல் மருத்துவம் உள்பட 17 வகையான சிறப்பு மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற திட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை (பிப்.27) வரை 1,256 மருத்துவ முகாம்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 18,52,561 போ் பயனடைந்துள்ளனா். இந்த முகாம்களில் மட்டும் 50,190 போ் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை புதிதாகப் பெற்றுள்ளனா். மேலும், 60,682 மாற்றுத்திறனாளிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 8,401 பேருக்கு கண்புரை நோய்கள் கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. 1,626 பேருக்கு இருதய நோய் பாதிப்பும், 3,877 பேருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பும், 595 பேருக்கு காசநோய் பாதிப்பும், 1,50,708 பேருக்கு புதிதாக சா்க்கரை நோய் பாதிப்பும் கண்டறியப்பட்டது. அவா்கள் மேல் சிகிச்சைகளுக்கான பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...