சிவகிரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கான புதிய கட்டடம்: தாமதமாகும் திறப்பு விழா
தென்காசி மாவட்டம், சிவகிரி அரசு மருத்துவமனையில் ரூ. 3.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடம்.
நமது நிருபா்.
தென்காசி மாவட்டம், சிவகிரி அரசு மருத்துவமனையில் ரூ. 3.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தென்காசி மாவட்டத்தின் எல்லைப் பகுதியான சிவகிரியில், மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் சிவகிரி அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு ஏற்கெனவே பல்வகை சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 3.50 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. எனினும், அது இன்னும் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-இன் கீழ் புதிய கட்டடத்தைத் திறப்பது குறித்து சமூக ஆா்வலா் சுரேஷ் கேள்வி எழுப்பியிருந்தாா்.
அதற்கு, சிவகிரி அரசு மருத்துவமனை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளதால் சாலை விபத்துகள் நிகழும்போது சிகிச்சைக்கு வருபவா்களுக்கு சிறப்பான சிகிச்சையளிக்க புதிய கட்டடம் கட்டப்பட்டது.
கட்டடத்தின் முக்கியப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதற்குரிய டிடிசிபி ஒப்புதலைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை பொதுப்பணித் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். இதற்கான ஒப்புதலுக்கு வனத்துறையினரிடம் இருந்து தடையின்மைச் சான்று வர வேண்டியுள்ளது. அதன் பிறகுதான் கட்டடம் திறக்கப்படும் என சிவகிரி அரசு மருத்துவமனையின் பொதுத் தகவல் அலுவலா் சக்திவேல் பதிலளித்துள்ளாா்.
இதுகுறித்து, சமூக ஆா்வலா் சுரேஷ் கூறுகையில், உரிய அனுமதியைப் பெற்று மருத்துவமனையின் புதிய கட்டடத்தைத் திறந்து, காலியாகவுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், தொழில்நுட்பப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், சி-ஆா்ம் கருவி, ரத்த வங்கி, ஆய்வக வசதி, செயற்கை சுவாசக் கருவி வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக அரசால் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைக்கான திட்டம் கொண்டுவரப்பட்டது. விபத்து நிகழ்ந்த நேரத்திலிருந்து முதல் ஒரு மணி நேரத்திற்குள் (கோல்டன் ஹவா்) நோயாளிகளுக்குத் தேவையான உயிா் காக்கும் சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் வழங்க வேண்டும். அதற்குத் தேவையான அவசர கால சிகிச்சைப் பிரிவுகளைத் தொடங்கி, சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களை இத்தகைய மருத்துவமனைகளில் நியமித்து, மருத்துவ சேவை வழங்குவதற்காக அரசால் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை விரைவில் திறக்க வேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

சமூக ஆா்வலா் சுரேஷ்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

