அம்பாசமுத்திரம், ஜூன் 2: மண்ணுளி பாம்புக்கு பல லட்சம் ரூபாய் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பலை வனத் துறையினர் பிடித்தனர்.
இதுதொடர்பாக 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, ரூ. 2.55 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மண்ணுளி பாம்பு மருத்துவ குணம் கொண்டது என்றும், இந்த பாம்பைக் கொண்டு எட்ய்ஸ் நோய்க்கு மருந்து தயாரிக்கலாம் என்றும், சுமார் 3 கிலோ கொண்ட மண்ணுளி பாம்பை பல லட்சம் ரூபாய்க்கு விற்கலாம் என்ற தகவலால் அந்த வகை பாம்புகளை கடத்தும் நிகழ்வுகள் தமிழகத்தில் பரவலாக நடைபெற்றன.
தமிழகம், கேரளத்தைச் சேர்ந்த பலர் இச்செயலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, முதன்மை வன உயிரின பாதுகாவலர் சுந்தரராஜன், புலிகள் காப்பக கள இயக்குநர் ராம்குமார் உத்தரவின் பேரில், களக்காடு, முண்டன்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர்கள் சி. பத்ரசாமி, து. வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில், வனச் சரகர்கள் ஆறுமுகம், கிதுரொலி, வனவர்கள் மோகன், சுப்பராவ், ஜெபாஸ், முருகேசன் உள்ளிட்ட வனத் துறையினர் விசாரணை நடத்தினர்.
மண்ணுளி பாம்பு வியாபாரியாக துணை இயக்குநர் பத்ரசாமி, சிறு வியாபாரியாக வனவர் மோகன், உதவியாளராக முருகேசன் ஆகியோர் மாறுவேடத்தில் விசாரணையை தொடங்கினர்.
பாபநாசத்தில் பாம்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட தகவலை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் தரகர்கள் 64 பேர் இங்கு வந்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், மண்ணுளி பாம்பை யாரும் பணம் கொடுத்து வாங்கவில்லை. பாம்பு, பணத்துடன் வருபவர்களை அடித்து உதைத்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை துணை இயக்குநர்கள் சி. பத்ரசாமி, து. வெங்கடேஷ் ஆகியோர் கூறியதாவது:
மண்ணுளி பாம்புகள் விற்பனைக்காக இருப்பதாக பரப்பிய தகவலையடுத்து, கேரள மாநிலம் மலப்புரம், ஆலப்புழை, எர்ணாகுளம், கொச்சி, தமிழகத்தில் சாத்தூர், கொடைக்கானல், சின்னமனூர், சிவகாசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில், அருப்புகோட்டை, டி. கல்லுப்பட்டி, வத்திராயிருப்பு, பேரையூர், வடுகப்பட்டி, திண்டுக்கல், திருப்பூர், உதகை, கூடலூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதியில் இருந்தும் தரகர்கள் 64 பேர் பாபநாசம் வந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் மண்ணுளி பாம்பை யாரும் பணம் கொடுத்து வாங்கவில்லை. பாம்புக்கு பல லட்சம் தருவதாக பொய்யான தகவலை பரவ செய்து, பின்னர் பணம், பாம்புடன் வருபவர்களை மடக்கி அடித்து உதைத்து பணத்தைப் பறித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பொதுமக்கள் ஏமாந்துள்ளனர்.
மதுரையை மையமாக வைத்து கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. இக் கும்பல் தேவாங்கு, ஆந்தை, எறும்புத்திண்ணி, நட்சத்திர ஆமை போன்றவற்றை செல்போனில் படம் பிடித்து வைத்து கொண்டு மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
மூட நம்பிக்கையை பயன்படுத்தி உலகில் இல்லாத சில பொருள்களை சொல்லி, அதன் மூலம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை பொதுமக்கள் நம்பக்கூடாது.
மண்ணுளி பாம்பு கடத்தல் தொடர்பாக கேரள மாநிலம் மலப்புரம் முஜிப், எர்ணாவூர் சங்கர், ஆலப்புழை சாஜு, கொச்சி பொன்னு மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த டி. கல்லுப்பட்டி விவேகானந்தன், கிணத்துக்கடவு மகேஷ், திண்டுக்கல் சுப்பையா, மதுரை தனபால், நாகர்கோவில் சந்திரன், கூடலூர் பஷீர், சின்னமனூர் செல்லத்துரை, செல்வகுமார் உள்பட 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களிடமிருந்து ரூ. 2.55 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், 120 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றனர் அவர்கள்.
வனத் துறையினரை மிரட்டியகடத்தல் கும்பல்
மண்ணுளி பாம்பு கடத்தல் கும்பலை பிடிக்க, வியாபாரியாக மாறுவேடத்தில் செயல்பட்ட துணை இயக்குநர் பத்ரசாமி உள்ளிட்ட வனத் துறையினர் 8 பேரை, கடத்தல் கும்பலைச் சேர்ந்த 25 பேர் மடக்கி, மிரட்டி தாக்க முயன்றுள்ளனர்.
அப்போது துப்பாக்கியுடன் வந்திருந்த வனத் துறை அதிகாரிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு, கடத்தல் கும்பலை மடக்கிப் பிடித்தனர்.
இந்த கடத்தல் கும்பலை ஒரு பெண் வழிநடத்துவதாகவும், அவர் விரைவில் சிக்குவார் என்றும் வனத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிஞ்சுக் கைவண்ணம்
முதல் தேர்தலும் சுகுமார் சென்னும்...
ஏழு தலைமுறை சுற்றம்...

முத்தான முத்தல்லவோ...
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

