காற்றாலை மின் உற்பத்தியில் கடும் சரிவு: தென் மாவட்டங்களில் 3 மணி நேரம் மின் தடை
காற்றாலை மின்சார உற்பத்தி வெகுவாகக் குறைந்ததால், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தினமும் 3 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது.
காற்றாலை மின்சார உற்பத்தி வெகுவாகக் குறைந்ததால், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தினமும் 3 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது.
தமிழகத்தில் அனல் மின் நிலையம், புனல் மின் நிலையம், காற்றாலைகள், டீசல் மின்சார உற்பத்தி நிலையம் மற்றும் மத்திய தொகுப்பிலிருந்தும் மின்சாரம் பெறப்பட்டு மின்சாரம் வழங்கப்படுகிறது. சராசரியாக தினமும் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.
ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காற்று வீசும் சீசன் என்பதால், காற்றாலைகள் மூலம் அதிகபட்சம் 4 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் கிடைப்பது வழக்கம். ஆனால், நிகழாண்டில் மே மாதத்துக்கு பிறகு காற்று குறைந்ததால் காற்றாலைகள் மூலமான மின்சார உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும், செப்டம்பர் மாதத்தில் காற்று வீசும் திறன் அதிகரித்து மின் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காலநிலை மாற்றத்தால் காற்று சீசன் அடியோடு குறைந்து மின் உற்பத்தியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
காற்றின் வேகம் குறைந்ததால், காற்றாலைகள் மூலம் வெள்ளிக்கிழமை 50 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 23ஆம் தேதி 1,364 மெகாவாட்டும், 20ஆம் தேதி 1,866 மெகாவாட்டும் மின்சாரம் கிடைத்து வந்த நிலையில், மின் உற்பத்தி 50 மெகாவாட்டாக குறைந்ததால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் தினமும் 2 மணி நேரமும், கிராமப்புறங்களில் தினமும் 3 மணி நேரமும் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
தென்மேற்குப் பருவமழை காலம் முடிந்து வெயிலின் தாக்கம் அதிகரித்த காரணத்தால், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சாதனங்கள், குறிப்பாக ஏசி உள்ளிட்ட அனைத்து வகையான மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மின் தேவை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் மின் உற்பத்தி வெகுவாக குறைந்ததால் மின்தடை அமல்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

