தென்காசி வட்டாரத்தில் மக்களுக்கு பயனளிக்காத சுகாதார வளாகங்கள்
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் அடுத்த ஆண்டில் கொண்டாடப்பட உள்ள நிலையில், அவருடைய கனவான தூய்மையான இந்தியா


மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாள் அடுத்த ஆண்டில் கொண்டாடப்பட உள்ள நிலையில், அவருடைய கனவான தூய்மையான இந்தியா திட்டம் நிறைவேறுமா என்பது சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பொது இடங்களில் புகைப்பிடித்தல், எச்சில் துப்புதல், திறந்தவெளியில் மலம் கழித்தல், குப்பைகளை கண்ட இடங்களில் தூக்கி வீசுதல் போன்றவற்றால் நமது சுற்றுப்புறம் அசுத்தமாவதுடன், அதனால் பல்வேறு நோய்களும் உருவாகி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கடந்த 2014இல் ஆட்சியமைத்தபின் அதே ஆண்டு அக்டோபர் 2இல் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. தொடக்க விழாவில் பேசிய பிரதமர், 2019ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் தருணத்தில் தூய்மையான இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும். மகாத்மாவின் கனவு நனவாக்கப்பட வேண்டும் என்றார்.
தற்போது தூய்மை இந்தியா இயக்கம் நாடு முழுவதும் தேசிய இயக்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தில் மக்களும் பல்வேறு அரசுத் துறைகளும் அமைப்புகளும் கலந்துகொண்டு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றன. நாட்டில் அனைத்து வீடுகளிலும், பள்ளிகளிலும் கழிப்பறை கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும், இந்தியாவை திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நாடாக்க வேண்டும் என்பது இதன் நோக்கமாகும். இதற்காக 12 ஆயிரம் மில்லியன் கழிவறைகளை ஊரகப்பகுதிகளில் ரூ.1.96 ஆயிரம் கோடி மதிப்பில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பல்வேறு இடங்களில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிதிகளில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் திறக்கப்படாமலே உள்ளன.
தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 2005ஆம் ஆண்டு ரூ.2லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பறை இதுவரை திறக்கப்படாமலேயே உள்ளது. இதேபோன்று தென்காசியிலிருந்து ஆயிரப்பேரி செல்லும் சாலையில் பழைய அரசு மருத்துவமனை அருகே நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட கழிப்பறையும் பயன்பாட்டிற்கு வரவில்லை. பயன்படுத்தப்படாமலே இருந்த அந்தக் கழிப்பறை, தற்போது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.2.5 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. அதன் பின்னரும் பூட்டிய நிலையிலேயே உள்ளது.
தென்காசி அருகே இலஞ்சி இந்திரா நகர் பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் 2014இல் கட்டிமுடிக்கப்பட்ட கழிப்பறையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
தென்காசி அருகே இலத்தூர்- கணக்கப்பிள்ளைவலசை சாலையில் உள்ள மகளிர் சுகாதார வளாகம், மக்கள் உள்ளே செல்ல முடியாதவாறு புதர் மண்டிக் கிடக்கிறது. தென்காசியிலிருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் மக்கள் வசிக்காத பகுதியில், தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ.1.5 லட்சம் மதிப்பில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இந்தக் கழிப்பறைக்கு செல்வதற்கான பாதை முழுமையாக முள்புதர்களால் நிரம்பிய நிலையில் உள்ளது.
தென்காசியிலிருந்து குற்றாலம் செல்லும் சாலையில் குற்றாலம் நுழைவுவாயில் பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் கடந்த 2014இல் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகம் இதுவரையிலும் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படவில்லை.
இந்த சுகாதார வளாகங்கள் செயல்படாததற்கு என்ன காரணங்கள் கூறப்பட்டாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அரசின் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலக்குகளை பூர்த்தி செய்துவிட்டதாக நிரூபணம் செய்வதற்காகவும் இதுபோன்ற செயல்கள் தமிழகம் முழுவதும் தொடர்கின்றன.
எனவே, இப்பகுதியில் செயல்படாமல் உள்ள கழிப்பறைகளையும், சுகாதார வளாகங்களையும் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் விருப்பமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...