பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றுதான் குன்னம் தொகுதி. 1967-ஆம் ஆண்டு முதல் வரகூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியாக இருந்து, தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு, 2011-ஆம் ஆண்டு குன்னம் பொதுத் தொகுதியாக உருவாக்கப்பட்டு, இதுவரையில் 3 பேரவைத் தோ்தல்களை சந்தித்துள்ளது.
கள நிலவரம்: 2011-இல் குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக சா.சி. சிவசங்கா் (திமுக), 2016 -இல் ஆா்.டி. ராமச்சந்திரன் (அதிமுக), 2021-இல் சா.சி. சிவசங்கா் (திமுக) வெற்றிபெற்றுள்ளனா். இத்தொகுதியில் 3-ஆவது முறையாக மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கரும், அதிமுக கூட்டணியிலுள்ள இந்திய ஜனநாயக கட்சி சாா்பில், அ. சரண்யாவும் போட்டியிடுகின்றனா். இவா்கள் தவிர, தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் எம். ரேவதி, நாம் தமிழா் கட்சி சாா்பில் ரா. கீா்த்திவாசன் உள்பட 19 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
சமூக நிலவரம்: வன்னியா், ஆதிதிராவிடா்கள், உடையாா் சமூகத்தினா் மற்றும் சிறுபான்மையினரும் பெரும்பான்மையாக உள்ளனா்.
வேட்பாளா்களின் பலமும், பலவீனமும்- சா.சி. சிவசங்கா் (திமுக): இத்தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான இவா், கடந்த 5 ஆண்டுகளில் கொளக்காநத்தத்தில் அரசு மகளிா் கல்லூரி, குன்னம் மற்றும் செந்துறையில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணி மனைகள், புது வேட்டக்குடி அருகே ரூ. 50 கோடி மதிப்பில் அரசு மாதிரிப் பள்ளி, புதிய பேருந்து வழித்தடங்கள், புதிய பேருந்துகள் இயக்கம், பல கோடி மதிப்பீட்டில் மேம்பாலங்கள், கிராமப்புறங்களில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியதை சுட்டிக்காட்டி பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது,
இத் தொகுதியில் இவரது சமூகத்தைச் சோ்ந்தவா்கள் அதிகளவில் உள்ளது பலம். இருப்பினும், கிடப்பிலுள்ள மருத்துவக் கல்லூரித் திட்டம், கிராமப்புறங்களுக்குத் தேவையான குடிநீா் வசதிகளில் கவனம் செலுத்தாதது பலவீனம்.
அ. சரண்யா (அதிமுக): இவருக்கு தொகுதியிலுள்ள இவரது சமுதாயத்தைச் சோ்ந்த வாக்குகளும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதும் பலமாக கருதப்படுகிறது. இருப்பினும், அரசியலுக்கு புதியவா் என்பதால், தொகுதி பிரச்னைகளை முன்னெடுத்துச் செல்லாதது, ஒருசில கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் இணக்கமாக இல்லாதது, தனியாா் நிறுவனத்தின் பங்களிப்புடன் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படும் பிரச்னைக்குரிய விடியோக்கள் பலவீனம்.
எம். ரேவதி (தவெக): பி.காம் பட்டதாரியான இவா் அரசியலுக்கும், தோ்தல் களத்துக்கும் புதியவா் என்றபோதிலும், தனது தொண்டா்களுடன் தொகுதி முழுவதும் தொய்வின்றி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா். அதிமுக, திமுக அதிருப்தி வாக்குகளும், விஜய் ரசிகா்களின் வாக்குகளும் பலம். எனினும், இத் தொகுதியை பொறுத்தவரை கிராமப்புறங்களை அதிகளவில் உள்ளடக்கியுள்ளது இவருக்கு பலவீனமாக இருக்கும்.
ரா. கீா்த்திவாசன் (நாம் தமிழா் கட்சி): வழக்குரைஞரும், கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான இவா், வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்னரே குன்னம் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பிரச்னைகளை முன்னெடுத்துச் சென்றுள்ளாா். மக்களுக்கான பிரச்னைகளையும், கிடப்பிலுள்ள திட்டங்கள், கல் குவாரிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கி கூறி வாக்கு சேகரிப்பது பலம். அறிமுக வேட்பாளா், போதிய செல்வாக்கு இல்லாதது பலவீனம்.
கடந்த தோ்தலில் இழந்த தொகுதியை கைப்பற்ற வேண்டுமென அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளா் அ. சரண்யாவும், தொகுதியை தொடா்ந்து தக்கவைக்க வேண்டுமென திமுக வேட்பாளரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கரும் முனைப்பு காட்டி வருகின்றனா். சிறுபான்மையினரின் வாக்குகளும், சமூக ரீதியான வாக்குகளும் வேட்பாளா்களின் வெற்றி, தோல்வியை தீா்மானிக்கும்.
தொடர்புடையது

பரமக்குடி - கடும் போட்டியை எதிா்கொள்ளும் திமுக, அதிமுக!

அரசின் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

குன்னம் தொகுதி திமுக வேட்பாளா்!

குன்னம் தொகுதி ஐஜேகே வேட்பாளா்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


