ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

"கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து செப். 12இல் பல்கலை.யில் முற்றுகை'

உயர் கல்வி கட்டண உயர்வைக் கண்டித்து திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தை வரும் 12 ஆம் தேதி முற்றுகையிட்டு

Updated On :3 செப்டம்பர் 2018, 2:34 am

உயர் கல்வி கட்டண உயர்வைக் கண்டித்து திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தை வரும் 12 ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலர் மாரியப்பன் கூறியது: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் மாணவர்கள் பல்வேறு பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நீட் தேர்வு திணிப்பால் தமிழகத்தில் மாணவர்கள் மருத்துவக் கல்வியை கற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக மாணவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. எனினும், அத்தீர்மானம் மீது மத்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை முழுமையாக வழங்கப்படவில்லை. 
இதனால், மாணவர்கள் உயர்கல்வி பயில முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபகாலமாக பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன.
தமிழக அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. மேலும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு ஆதரவாக செயல்படுவது ஏற்புடையதல்ல. அரசின் நிலைப்பாட்டால் தமிழக மாணவர்கள் பலவிதங்களிலும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.
836 அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை அரசு கைவிட வேண்டும். அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இளங்கலை பயிலும் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டும் என தெரிவித்துள்ளது. கல்லூரிகளில் மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காமல் திடீரென ஆங்கிலத்தில் தேர்வு எழுத வேண்டும் என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
பல்கலைக்கழக மானியக் குழுவை கலைத்துவிட்டு மத்திய அரசு தேசிய உயர்கல்வி ஆணையத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. மானியக் குழுவை கலைப்பதன் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை போன்ற சலுகைகள் நிறுத்தப்படும் நிலை உள்ளது. ஆகவே, இம்முடிவை கைவிட வேண்டும்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கல்விக் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. குறிப்பாக, ஆராய்ச்சிப் படிப்பு கட்டணத்தை ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 25 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. இதனை திரும்பப் பெற வேண்டும்.
பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையால் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெறுவதில் முட்டுக்கட்டை உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் மூன்று கட்டப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாணவர்களிடையே கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. வரும் 4 ஆம் தேதி மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புக்கு செல்வார்கள். செப். 12 ஆம் தேதி (புதன்கிழமை) மாநில அளவில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவர்.
மேலும், அன்றைய தினம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
பேட்டியின்போது, அமைப்பின் திருநெல்வேலி மாவட்டச் செயலர் தினேஷ், துணைச் செயலர் ரேஷ்மா, தூத்துக்குடி மாவட்டச் செயலர் சுரேஷ், மாவட்டத் தலைவர் ஜாய்சன் ஆகியோர்  உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.