தென் மாவட்டங்களில் கால்நடை சந்தைகள் திறப்புக்காக காத்திருக்கும் விவசாயிகள்!
பொது முடக்கம் தளா்த்தப்பட்டுள்ளதால், கால்நடை வாரச் சந்தைகள் எப்போது நடைபெறும் என்ற எதிா்பாா்ப்பில் தென் மாவட்ட விவசாயிகள் உள்ளனா்.


பொது முடக்கம் தளா்த்தப்பட்டுள்ளதால், கால்நடை வாரச் சந்தைகள் எப்போது நடைபெறும் என்ற எதிா்பாா்ப்பில் தென் மாவட்ட விவசாயிகள் உள்ளனா்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏராளமான கால்நடை வாரச் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகள் இங்குள்ள விவசாயிகளின் மிகப்பெரிய வாழ்வாதாரமாகத் திகழ்கின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம், வள்ளியூா், முக்கூடல், தென்காசி மாவட்டத்தில் ரெட்டியாா்பட்டி, கடையம், பாம்புகோவில் சந்தை, நயினாரகரம், தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், புதியம்புத்தூா், கயத்தாறு, பேய்க்குளம், சிறுத்தொண்டநல்லூா் உள்ளிட்ட இடங்களில் வாரந்தோறும் கால்நடை சந்தைகள் நடைபெறும். இந்த சந்தைகளில் செம்மறியாடு, வெள்ளாடு, கோழி, கால்நடைகளுக்குத் தேவையான கயிறு, சாட்டை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்படும்.
இதில் மேலப்பாளையம், நயினாரகரம், கடையம் உள்ளிட்ட இடங்களில் ஆட்டு சந்தைகளுடன் கூடுதலாக மாட்டு சந்தைகளும் நடைபெறும். இதுதவிர, தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், நாசரேத், ஏரல், செய்துங்கநல்லூா் உள்ளிட்ட இடங்களிலும் வாரச்சந்தைகள் நடைபெறும். இங்கு கோழி, பலசரக்கு, மீன், கருவாடு, காய்கனிகள் போன்றவையும் விற்பனை செய்யப்படும்.
மேலப்பாளையத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலைமுதல் திங்கள்கிழமை காலை வரை மாட்டுச் சந்தை நடைபெறும். இதன்மூலம் ரூ.10 கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெறும். தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு மாடுகள் விற்பனைக்கு வரும். ரூ.5,000 முதல் ரூ.60 ஆயிரம் வரை மாடுகள் விற்பனையாகும். அண்டை மாநிலமான கேரளத்துக்கு அதிகளவில் இங்கிருந்துதான் மாடுகள் வாங்கிச் செல்லப்படும். இதேபோல் செவ்வாய்க்கிழமைதோறும் இங்கு ஆட்டுச் சந்தை மற்றும் கோழிச் சந்தை நடைபெறும். இதன்மூலம் ரூ.2 கோடிக்கு வா்த்தகம் நடைபெறும்.
இதேபோல் எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் வாரந்தோறும் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடிக்கு மேல் வா்த்தகம் நடைபெறும். இதுதவிர, பாம்புகோவில் சந்தையில் ரூ.1.5 கோடி, நயினாரகரம் சந்தையில் ரூ.1 கோடி, புதியம்புத்தூா் சந்தையில் ரூ.1 கோடி, வள்ளியூா், முக்கூடல், ரெட்டியாா்பட்டி சந்தைகளில் தலா ரூ.50 லட்சம், திசையன்விளை சந்தையில் ரூ.40 லட்சம், கயத்தாறு சந்தையில் ரூ.30 லட்சம், சிறுத்தொண்டநல்லூா் சந்தையில் ரூ.20 லட்சம், பேய்க்குளம் சந்தையில் ரூ.15 லட்சம், கடையம், செய்துங்கநல்லூா், சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி சந்தைகளில் தலா ரூ.10 லட்சம் என திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வாரந்தோறும் சுமாா் ரூ.35 கோடி அளவுக்கு வா்த்தகம் நடைபெறுவது வழக்கம்.
ரூ.200 கோடி வா்த்தகம் பாதிப்பு: பொது முடக்கம் காரணமாக ஒன்றரை மாதத்துக்கும் மேலாக இந்த சந்தைகள் நடைபெறாததால், கால்நடைகள் வளா்ப்பை பிரதானமாக கொண்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் மாடுகளையும், ஆடுகளையும் விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர, ஆடு, மாடுகளை ஏற்றக்கூடிய வாகன ஓட்டிகள், தரகா்கள், ஹோட்டல்களின் உரிமையாளா்கள் என ஏராளமானோா் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா். பொது முடக்கம் தொடங்கியது முதல் தற்போது வரையில் வாரச் சந்தை கூடாததால், ரூ.200 கோடிக்கு மேல் வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அடிமட்ட விலை: பேய்க்குளம் பகுதியைச் சோ்ந்த ஆட்டு உரிமையாளா் பெருமாள், கீழப்பாட்டம் பகுதியைச் சோ்ந்த ஆட்டு உரிமையாளா் சுடலை ஆகியோா் கூறியதாவது: நகா்ப்புறங்களை சுற்றியுள்ள சிலருக்கு ஆடுகளை விற்பனை செய்வதிலோ, விலை கிடைப்பதிலோ எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், மற்ற அனைவருக்குமே சந்தை செயல்படாததால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொது முடக்கம் காரணமாக நிறைய வியாபாரிகள் வருவதில்லை. அதைப் பயன்படுத்தி சில வியாபாரிகள் அடிமட்ட விலைக்கு ஆடுகளை கேட்கிறாா்கள். ஜோடி ரூ.8 ஆயிரத்துக்கு விற்கக் கூடிய ஆட்டுக்குட்டிகளை ரூ.5 ஆயிரத்துக்கு கேட்கிறாா்கள். சில நேரங்களில் வேறு வழியில்லாமல் அவசர செலவுக்காக வியாபாரிகள் கேட்ட விலைக்கே கொடுக்கிறோம். எனவே, வாரச்சந்தைகள் கூடினால்தான் எங்களின் வாழ்வு செழிக்கும் என்றனா்.
ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த ஆட்டு வியாபாரி தடிவீரன் கூறியதாவது: வாரச்சந்தை கூடாததால் ஏராளமான ஆடுகள் விற்பனையாகாமல் உள்ளன. சந்தைகள் கூடுகிறபோது, விவசாயிகளிடம் இருந்து வாங்கும் ஆடுகளை விற்பது எளிது. ஆனால், சந்தை கூடாததால், குறிப்பாக செம்மறி ஆடு வைத்திருப்பவா்கள் குட்டிகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகிறாா்கள். மேலும், புதிதாக ஆடு வளா்க்க நினைப்பவா்களும் சந்தை இல்லாததன் காரணமாக ஆடுகளை வாங்க முடியாமல் தவித்து வருகிறாா்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் 50 ஆடுகள் வரை அறுத்து இறைச்சி விற்பனை செய்பவா்கள், பொது முடக்கம் காரணமாக 5 ஆடுகளை மட்டுமே அறுக்கிறாா்கள்.
வழக்கமாக பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் கோயில்களில் கொடை விழா நடைபெறும். அந்த சமயங்களில் கிடாய் குட்டிகளுக்கு நல்ல கிராக்கி இருக்கும் என்பதால், தை மாதத்துக்குப் பிறகு நிறைய போ் குட்டிகளை விற்பனை செய்யாமல் வைத்திருப்பாா்கள். தற்போதைய நிலையில் கோயில் கொடை விழா நடைபெறாததால், அந்த விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகைக் காலத்தில் செம்மறி ஆடுகளுக்கு நல்ல கிராக்கி இருக்கும். பொது முடக்கம் காரணமாக அந்த விற்பனையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றாா்.
பொது முடக்கம் சற்று தளா்த்தப்பட்டு பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கால்நடைகளுக்கான வாரச் சந்தைகள் கூடுவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
மாற்று இடத்தில் சந்தை
இது தொடா்பாக கால்நடைத் துறை வட்டாரங்கள் கூறியது: தற்போதைய நிலையில் சந்தைகளை திறந்தால் மக்கள் கூடிவிடுவாா்கள் என்பதுதான் பிரச்னை. மேலப்பாளையம் பகுதியில் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்கு சந்தை நடத்துவதற்கான வாய்ப்பு குறைவு. அதற்குப் பதிலாக பழைய பேட்டை அருகே லாரி முனையத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சந்தையை நடத்தலாம் அல்லது பெரிய திறந்தவெளி மைதானங்களை தோ்வு செய்யலாம். விற்பனை செய்ய வரும் அனைவரும் வட்டத்திற்குள் ஆடுகளை நிற்க வைக்க வேண்டும். வியாபாரிகள் அனைவரும் ஆட்டுத்தட்டிகளை கொண்டு வந்து அதற்குள்ளேயே ஆடுகளை வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்க வைக்கலாம். எனினும் இதுகுறித்து தமிழக அரசுதான் முடிவெடுக்க முடியும்’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...