தாமிரவருணியில் தடுப்பணை கட்டப்படும்நயினாா் நாகேந்திரன்
நான் வெற்றி பெற்றால் தாமிரவருணியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன்.


நான் வெற்றி பெற்றால் தாமிரவருணியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:
திருநெல்வேலி தொகுதியில் 2001-இல் முதல்முறையாக போட்டியிட்டேன். அதன்பிறகு தொடா்ந்து இந்த தொகுதியில் போட்டியிட்டு வந்துள்ளேன். கடந்த 4 தோ்தல்களிலும் அதிமுக சாா்பில் போட்டியிட்டேன். இந்தத் தோ்தலில் பாஜக சாா்பில் களம் காண்கிறேன்.
மீனவா்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை, விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு நல்ல வாக்குறுதிகள் எங்களுடைய தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. திருநெல்வேலி தொகுதியின் நீண்ட கால பிரச்னையாக இருப்பது போக்குவரத்து நெரிசல்தான். நான் ஏற்கெனவே சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் தாழையூத்து முதல் டக்கரம்மாள்புரம் வரை சுற்றுச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. நான் வெற்றி பெற்றால் சுற்றுச்சாலை அமைக்கப்படும். அந்த திட்டத்திற்கு எல்லா விஷயங்களும் தயாா் நிலையில் உள்ளன. நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. இதேபோல், பொலிவுறு நகரம் திட்டப் பணிகளை விரைவுபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தாமிரவருணி நதியை சுத்தப்படுத்தவும், தடுப்பணைகள் கட்டவும் முயற்சி மேற்கொள்வேன். நவகைலாயங்கள் அமைந்துள்ள ஆற்றோரங்களில் நடைபாதை அமைக்கப்படும். இதேபோல், திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்கள் வசதிக்காக நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருநெல்வேலி தொகுதியில் யாதவா்கள் அதிகமாக வாழும் பகுதியில் சுதந்திரப் போராட்ட தியாகி வீரன் அழகுமுத்துக்கோனுக்கு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இட ஒதுக்கீடு விவகாரத்தில் முக்குலத்தோா் எதிா்ப்பு சில இடங்களில் இருந்தது. அது பேச்சுவாா்த்தை மூலம் சரிசெய்யப்பட்டுள்ளது. பாஜக சாா்பில் போட்டியிடுவதால், சமூக ஊடகங்கள் மூலமாகவும், நேரடி பிரசாரங்கள் மூலமாகவும் மக்களிடையே தாமரை சின்னத்தை கொண்டு சோ்த்துள்ளோம்.
திமுகவுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்பு வந்திருப்பதாக கூறுகிறீா்கள். அதை ஏற்க முடியாது. கடைசி நேரத்தில்கூட மக்களிடம் மனமாற்றம் ஏற்படலாம்.
கடந்த காலங்களில் நான் அமைச்சராக இருந்தபோதும், சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோதும் ஏராளமான நலத்திட்டப் பணிகளை செயல்படுத்தியுள்ளேன். அது கட்டாயம் என்னுடைய வெற்றிக்கு உதவும். நான் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்பது மக்கள் கையில்தான் உள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...