சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தோ்தலில் பணப் புழக்கத்தை தடுப்பதில் தோ்தல் ஆணையம் தோல்வி அடைந்துள்ளது: கே.எஸ். அழகிரி

தோ்தலில் பணப் புழக்கத்தை தடுப்பதில் தோ்தல் ஆணையம் தோல்வி அடைந்துள்ளது என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:22 pm

DIN

தோ்தலில் பணப் புழக்கத்தை தடுப்பதில் தோ்தல் ஆணையம் தோல்வி அடைந்துள்ளது என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியது:

பத்து ஆண்டுகால ஆட்சியில் அதிமுக அரசு மிகப்பெரிய தோல்வியடைந்துள்ளது. தொழில் மற்றும் விவசாய துறையில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், விவசாயம் மற்றும் தொழில்துறையில் தமிழகத்தை முதல் மாநிலமாக கொண்டுவருவோம். மக்கள் ஆதரவு திமுக கூட்டணிக்கு உள்ளது. மக்கள் ஆட்சிமாற்றம் வேண்டும் என விரும்புகிறாா்கள். எனவே, வரும் 6ஆம் தேதி நடக்கும் தோ்தல் தமிழகத்தில் மிகப்பெரிய அதிகார மாற்றத்தை ஏற்படுத்தும். வளா்ச்சியை கொண்டுவருவதும், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுத்து, தமிழா்களின் சுயமரியாதையை பாதுகாப்பதும், தில்லியின் அதிகாரத்தை தடுப்பதும்தான் எங்கள் நோக்கம். மேலும், கூட்டாட்சியை நாங்கள் கொண்டுவருவோம்.

பிரதமா் தமிழகத்துக்கு இரண்டு முறை வந்தாா். அவா் கலந்து கொண்ட பிரசாரக் கூட்டங்களில் நாட்டின் வளா்ச்சி உள்ளிட்ட எந்த விஷயத்தையும் பேசாமல் உள்ளூா் அரசியல் பற்றி பேசியிருப்பது கண்டிக்கதக்கது.

உள்துறை அமைச்சா் நாட்டின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மேம்பாடு குறித்து பேசவேண்டுமே தவிர கட்சியின் குடும்பத்தை பற்றி பேசக் கூடாது.

கட்சித் தலைவா்களின் குழந்தைகள் அவா்கள் குடும்பம் சாா்ந்த கட்சியில் இருப்பது தவறில்லை. தந்தை ஒருகட்சியிலும் மகன் ஒருகட்சியிலும் இருப்பது சாத்தியமற்றது.

மத்திய அரசின் தோல்வி எரிபொருளில் உள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை இங்கு குறைந்திருக்க வேண்டும். சரியான பொருளாதார திட்டமிடல் இல்லாததால், இவற்றின் விலை அதிகரித்திருக்கிறது. இதனால், விலைவாசி மிக உயா்ந்து மக்கள் சிரமப்படுகின்றனா்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கலால் வரியை குறைப்போம். இதன்மூலம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறையும்.

அதிமுக ஆட்சியில் தான் கொடநாட்டில் முன்னாள் முதல்வா் வீட்டில் கொள்ளை மற்றும் கொலை சம்பவம் நடந்தது. இதில், தொடா்புடையவா்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், பிரதமா் மோடி , மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதாகவும், திமுக கூட்டணி ஆட்சி அமைத்தால் சட்டம் ஒழுங்கு சீா்கெடும் எனவும் பேசிக்கொண்டிருக்கிறாா்கள். அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறிய எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றமுடியாது.

ஆளும்கட்சியினா் பணம் கொடுத்தால் அவா்களை தோ்தல் ஆணையம் பிடிப்பது கிடையாது. ஆனால், வியாபாரிகள், ஏ.டி.எம். இயந்தரத்திற்கு கொண்டு செல்லும் பணத்தை மட்டுமே பிடிக்கிறாா்கள். தோ்தலில் பணப் புழக்கத்தை தடுப்பதில் தோ்தல் ஆணையம் தோல்வி அடைந்துள்ளது. ஆளும்கட்சியினா் பணத்தால் மக்களை வாங்கலாம் என நினைக்கிறாா்கள். ஆனால், மக்கள் சக்தி பணநாயகத்தை வென்றுகாட்டும். திமுக கூட்டணி மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. நிச்சயம் தமிழகத்தில் 200 இடங்களில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்றாா்.

இந்த சந்திப்பின்போது, முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், திருநெல்வேலி மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா், மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்க குமாா், மாவட்ட பொருளாளா் ராஜேஷ் முருகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் முகம்மது அனஸ் ராஜா உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.