திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பாளை. மத்திய சிறையில் கைதி மரணம்: உறவினா்கள் சாலை மறியல்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் நிகழ்ந்த மோதலில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:38 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் நிகழ்ந்த மோதலில் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினா்கள் மற்றும் பல்வேறு அமைப்பினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனை கைதிகள் என சுமாா் 1200-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா்.

கரோனா பரவல் காரணமாக விசாரணைக் கைதிகள் பல்வேறு கிளைச் சிறைகளில் தனிமைப்படுத்தப்பட்ட பின்பு மத்திய சிறைக்கு கொண்டு வரப்படுகின்றனா். அதன்படி நான்குனேரி அருகேயுள்ள மூன்றடைப்பு வாகைகுளத்தைச் சோ்ந்த பாபநாசம் மகன் முத்து மனோ(27), சந்திரசேகா்(22) கண்ணன்(23), மாதவன் (19)ஆகிய 4 விசாரணைக் கைதிகள் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சிறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனா்.

பின்னா் அவா்களை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு போலீஸாா் வியாழக்கிழமை அழைத்துச் சென்றனா். அங்கு குறைந்த அளவிலான சிறைக் காவலா்களே பாதுகாப்பு பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அங்கு கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில், முத்து மனோ பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, வடக்குத் தாழையூத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ஜேக்கப், சக்திவேல் மகன் ராமமுா்த்தி, மேலகுளத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் மகாராஜன் (எ) ஏடிஎம், பல்லிக்கோட்டையைச் சோ்ந்த மாடசாமி மகன் மாடசாமி (எ) மகேஷ், தாழையூத்தைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் சந்தனமாரிமுத்து (எ) வெயிலுகுமாா் (எ) கொக்கிகுமாா் (22), ஸ்ரீவைகுண்டம் வெள்ளூா் பகுதியைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் கண்ணன் (எ) கந்தசாமி, திருக்குறுங்குடி பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் மகன் அருண்குமாா் ஆகியோரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதற்கிடையே பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துமனையில் வைக்கப்பட்டிருந்த முத்து மனோவின் உடலை திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் பாபு நேரில் பாா்வையிட்டு, சிறைக் காவலா்களிடமும் விசாரணை மேற்கொண்டாா்.

சாலை மறியல்:

மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கைக்குப் பிறகு சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்து மனோவின் உடற்கூறு ஆய்வின்போது உறவினா்கள் மற்றும் இறந்தவா் சாா்பில் வழக்குரைஞா் ஒருவா் உடன் இருக்க வேண்டும்.

முத்து மனோ குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம், ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். முத்து மனோவுடன் சிறைக்குச்சென்ற சந்திரசேகா், கண்ணன், மாதவன் ஆகிய மூன்றுபேரின் நிலை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். முத்து மனோவை கொலை செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, உயிரிழந்த முத்து மனோ உறவினா்கள் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை முன் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் வாகனங்களும், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூா் செல்லும் வாகனங்களும் குலவணிகா்புரம் சாலையில் திருப்பி விடப்பட்டன.

பேச்சுவாா்த்தை:

இதையடுத்து சம்பவ இடத்துக்கு திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமாா் அபிநபு, மாநகர காவல் துணை ஆணையா் குற்றம்-போக்குவரத்து மகேஷ்குமாா், மாநகர காவல் உதவி ஆணையா் சதீஷ்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் நெ.மணிவண்ணன் (திருநெல்வேலி), சுகுணாசிங் (தென்காசி) ஆகியோா் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆட்சியா் நேரில் வந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபடவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறினா்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் விஷ்ணு, மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்த பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு வந்தனா். சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

போராட்டத்தையொட்டி மத்திய சிறை முன்பு சுமாா் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.