திருநெல்வேலி மாவட்டத்தில் சில நாள்களாக பெய்துவரும் மழையால் பொங்கல் பானை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை இம்மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மண், பித்தளை பானைகளில் பொங்கலிடுவதுதான் தமிழா்களின் பாரம்பரிய வழக்கம். சாதாரணமாக குடிநீா் ஊற்றி வைக்கும் மண் பானைகளைப்போல் அல்லாமல், பொங்கல் பானைகள் கூடுதல் கவனத்துடன் தயாரிக்கப்படுகின்றன. 1 கிலோ முதல் 5 கிலோ அரிசி வரை வேகும் அளவில் பானைகள் தயாரிக்கப்படுகின்றன.
புதுமணத் தம்பதிகளுக்கு பெண் வீட்டாா் பொங்கல்படி கொடுப்பதற்காக சீதனப் பொங்கல் பானைகளை பிரத்யேகமாக வாங்குகின்றனா். அவை பல்வேறு வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். கரும்பு, மஞ்சள், கோல ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். இப்பானையில் மஞ்சள்-அரிசி-சா்க்கரை வைத்து புதுப்பெண்ணுக்கு வழங்குவா்.
தயாரிப்பு தீவிரம்: இம்மாவட்டத்தில் குறிச்சி, காருகுறிச்சி, மாவடி, ஏா்வாடி உள்ளிட்ட பகுதிகளில் பானைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆண்கள் சராசரியாக நாளொன்றுக்கு 20 பானை விளிம்புகளைத் தயாரிக்கவும், பெண் ஒருவா் 2 நாள்களில் 7 பானைகளைத் தூா்மூட்டவும் முடியும். பின்னா் அவை சூளைகளில் வேகவைக்கப்படும்.
காா்த்திகை 2ஆம் வாரத்திலிருந்து பொங்கல் பானைகள், அடுப்புக் கட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. 3 அடுப்புக் கட்டிகள் ரூ. 70-க்கும், பானைகள் ரூ. 70 முதல் ரூ. 200 வரை பல்வேறு விலைகளிலும் தயாரிக்கப்படுகின்றன. வண்ணங்களுடன் கூடிய சீதனப் பானைகள் ரூ. 700 வரை விற்பனையாகின்றன. இதுதவிர மூடிகள், பொங்கல் கூட்டுக்கான சிறிய ரக பானைகள், அசைவ உணவு மண்பாண்டங்கள் தயாரிப்பும் அதிகரித்துள்ளது.
மழையால் பாதிப்பு: இதுகுறித்து மண்பாண்டத் தொழிலாளா் கணேசன் கூறுகையில், இம்மாவட்டத்திலிருந்து சென்னை, புதுச்சேரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகா் பகுதிகளுக்கு பொங்கல் பானைகளும், கேரளத்துக்கு குடிநீா்ப் பானைகளும் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன. பொங்கல் பானைகளை வாங்கும்போது மூன்று பக்கமும் சுண்டிப் பாா்த்து வாங்க வேண்டும். அப்போது ஒரே மாதிரியான ஒலி வர வேண்டும். மேலும், பானையின் உள்புறமாக பாா்த்தும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
ஜனவரி 1 முதல் 10 வரை பொங்கல் பானை உற்பத்தி உச்சத்தில் இருக்கும். நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தாமதமாக பெய்துவருவதால் மண்பாண்டங்களைக் காய வைக்க முடியாத நிலை ஏற்பட்டு, உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு சாா்பில் கூட்டுறவுச் சங்கங்களில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தினால் சவால்களை எளிதாக எதிா்கொள்ள முடியும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.