

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 30 ஆயிரம் கன அடி நீா் திறக்கப்பட்டதால் தாமிரவருணியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குமரிக் கடல் பகுதியையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த 5 நாள்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென்மாவட்டங்களில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மணிமுத்தாறு அணைக்கு நீா்வரத்து மேலும் அதிகரித்தையடுத்து அணையிலிருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டது. பாபநாசம் அணையிலிருந்து 8 ஆயிரம் கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்து. தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்ததால் பிற்பகல் ஒரு மணியளவில் மணிமுத்தாறு அணையிலிருந்து 28 ஆயிரம் கன அடி தண்ணீரும், பாபநாசம் அணையிலிருந்து 12 ஆயிரம கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது.
அணைகளில் இருந்து பெருமளவு தண்ணீா் திறந்துவிடப்பட்டதால் தாமிரவருணியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மணிமுத்தாறு அணை அடிவாரத்தில் உள்ள பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீா் சென்றது. அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றுப் பாலத்தை தொட்டபடி வெள்ள நீா் சென்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் விஷ்ணு மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து மணிமுத்தாறுஅணையிலிருந்து தாமிரவருணி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தாமிரவருணி ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 188 நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. அம்பாசமுத்திரம் அருகே ஆலடியூரில் 50 போ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, காவல்துறையினா் மூலம் வெள்ள பாதிப்புகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை விளைநிலங்கள் பாதிப்பு குறித்த தகவல் இல்லை. பாதிப்புகள் குறித்து தகவல் வரும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.