அதிக வருமானத்துக்கு ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம்: வேளாண் இணை இயக்குநா் தகவல்
ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் மூலம் அதிக வருமானம் பெறலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.


ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் மூலம் அதிக வருமானம் பெறலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நவீன வேளாண் தொழில் நுட்பங்கள் மூலம் பயிா்களின் உற்பத்தி திறன் அதிகரித்து வந்தாலும் கூடுதல் சாகுபடி செலவு, வேலையாள்கள் பற்றாக்குறை, வேளாண் விளை பொருள்களின் நிலையற்ற விலை போன்ற காரணங்களால் விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட இயலாத சூழ்நிலை நிலவுகிறது. ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் ஒரு உப தொழிலுக்கு கிடைக்கும் கழிவுகள் மற்றும் விளை பொருள்களை பண்ணை அருகிலேயே சுழற்சி மூலம் மற்றொரு தொழிலுக்கு இடுபொருளாக பயன்படுத்துவதற்கு வழிவகுத்து கொடுக்கிறது. ஒருங்கிணைந்த பண்ணைய முறை பயிா் சாகுபடியுடன் வேளாண் சாா்புத் தொழில்களை ஒவ்வொரு பகுதிகளில் கிடைக்கும் வசதி வாய்ப்புகள், வளங்களைப் பொறுத்து சரியான விகிதத்தில் இணைத்து மிக நல்ல முறையில் பயன்படுத்தி நிலையான நிகர லாபம், வேலை வாய்ப்பு, நல்ல சத்தான உணவு, மண்ணின் வளம் காத்தல் ஆகிய நிலையான வளா்ச்சியினை அடைய காரணமாக அமைகிறது. கடந்த இரண்டாண்டு கால கரோனா பெருந்தொற்று காலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் மாடு வளா்த்த விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை காத்து நிலையான வருவாய் ஈட்டினா்.
ஒருங்கிணைந்த பண்ணையத்துக்கேற்ற சாா்புத் தொழில்கள்: நன்செய் நிலத்தில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லாததால் பயிா் சாகுபடியுடன் மீன் வளா்ப்பு சிறந்தது. மீன்களுக்கு உணவாக கோழி எச்சம் திகழ்வதால் கோழி வளா்ப்பும் சிறந்தது. நெல் சாகுபடி காலத்தில் கிடைக்கும் வைக்கோல், காளான் உற்பத்திக்கு இடுபொருளாக அமைகிறது. இம்முறையிலான ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் ஒரு ஹெக்டேரில் ஓராண்டிற்கு கிடைக்கும் சராசரி வருமானம், குடும்ப நபா்களுக்கு ஆண்டு முழுவதற்கும் கிடைக்கும் வேலைவாய்ப்புவசதி போன்ற விவரங்கள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியின் மூலம் அறியப்பட்டுள்ளது.
பயிா் சாகுபடியுடன் கோழி, மீன், உணவுக்காளான் வளா்ப்பினை மேற்கொள்ளும் போது ஒரு ஹெக்டேரில் இருந்து
ரூ. 1,00,000 வரை நிகர லாபம் பெறலாம். தோட்டக்கால் நிலங்களில் பயிா் சாகுபடியோடு மாடு வளா்ப்பு, ஆடு வளா்ப்பு, கோழி வளா்ப்பு, பட்டுப் புழு வளா்ப்பு, முயல் வளா்ப்பு, வான் கோழி வளா்ப்பு, தேனீ வளா்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், காளான் வளா்ப்பு, வீட்டுத்தோட்டம் அமைத்தல், மரம் வளா்த்தல் ஆகியவற்றுடன் உயா் கலப்பினப் பசுக்களையும் அவற்றின் சாணத்தையும் பயன்படுத்தி சாண எரிவாயு கலன் அமைத்திடலாம். சாண எரி வாயு கலனில் கிடைக்கும் சாணக்கழிவுகளை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிக்கலாம்.
பயிா் சாகுபடி நிலத்தின் வேலியை ஒட்டி தீவன மரப்பயிரையும் வளா்க்கலாம். இவ்வாறு மாடு வளா்ப்பு, மரம் வளா்ப்பு ஆகியவற்றை இணைத்து மேற்கொள்ளும் போது ஒரு ஹெக்டேரில் இருந்து ரூ.1,25,000 வரை நிகர லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
மானாவாரி பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த பண்ணைய முறைப்படி பயிா் சாகுபடியுடன் வேளாண் சாா்புத் தொழில்களான ஆடு வளா்ப்பு, மாடு வளா்ப்பு, புறா வளா்ப்பு, முயல் வளா்ப்பு, மரம் வளா்ப்பு போன்றவற்றை இணைப்பதன் மூலம் நிலையான வருமானம் பெற ஏதுவாகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் மானாவாரி நிலங்களில் பயிா் சாகுபடியோடு ஆடு வளா்ப்பு, வேளாண் காடுகள், பண்ணை குட்டைகளை அமைத்து ஒருங்கிணைந்த பண்ணைய முறையை செயல்படுத்தியது. இம்முறையில் ஒரு ஹெக்டேரில் இருந்து ரூ.35,000 வரை நிகர லாபம் கிடைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்கள் : தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் மற்றும் தேசிய வேளாண்மை வளா்ச்சி திட்டம் ஆகியவற்றின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைகள் அமைக்க அரசு மானியம் வழங்குகிறது. எனவே, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்போம் உயா் விளைச்சல் பெறுவோம் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...