90 வயதில் மனைவியை காப்பாற்ற பனை மரம் ஏறி உழைத்து சாப்பிடும் துரைப்பாண்டி தாத்தா

துரைப்பாண்டி தாத்தா தனது 90 வயதில் சவால் மிகுந்த தொழிலான பனை மரம்  ஏறும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
90 வயதில் மனைவியை காப்பாற்ற பனை மரம் ஏறி உழைத்து சாப்பிடும் துரைப்பாண்டி தாத்தா
Published on
Updated on
2 min read

நெல்லை: நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே காரியாண்டி என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி தாத்தா வயது(90). இவரது மனைவி வேலம்மாள் பாட்டி. துரைப்பாண்டி தாத்தா தனது 12 வயதில் பனை மரம் ஏற கற்றுள்ளார் பின்னர் இளம் வயதில், அதையே முழு நேர தொழிலாக வைத்துள்ளார்.

குடும்பத்துடன் மும்பையில் குடியேறிய துரைப்பாண்டி தாத்தா, அங்கேயும் பனை மரம் ஏறும் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் குழந்தைகளின் திருமண வாழ்க்கைக்கு பின்னர் சொந்த ஊரான காரியாண்டியில் குடியேறி விட்டார். தற்போது 90 வயதை கடந்த துரைப்பாண்டி தாத்தாவை அவரது மகன் கவனிப்பதில்லை என்று கூறப்படுகிறது. முதுமை துரத்தவே கடைசி காலத்தில் மகனின் அரவணைப்பில் இளைப்பாறலாம் என்ற நினைத்த துரைப்பாண்டி தாத்தாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இருந்தாலும் தனது ஆசை மனைவி வேலம்மாளை பட்டினி போட மனமில்லாத துரைப்பாண்டி தாத்தா மீண்டும் பனை ஏறும் தொழிலில் அதிரடியாக களமிறங்கியுள்ளார். உழைப்புக்கு வயது தடை இல்லை என்பதை நன்கு உணர்ந்த துரைப்பாண்டி தாத்தா தற்போது வரை யாரிடமும் கையேந்தாமல் பனை ஏறி பதநீர் எடுத்தும், நொங்கு வெட்டியும் தனது பொருளாதார தேவையை போக்கி கொள்கிறார்.

இதற்காக தினமும் அதிகாலை எழுந்து கையில் அரிவாளுடன் பனை ஏற செல்கிறார். இளம் வயதில் நாள் ஒன்றுக்கு 30 மரம் ஏறும் அளவுக்கு உடல் ஒத்துழைத்துள்ளது. ஆனால் தற்போது பத்துக்கும் குறைவான மரங்களில் மட்டும் ஏறி மிக சிறிய வருமானத்தை கொண்டு மனைவியுடன் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார். துரைப்பாண்டி தாத்தாவுக்கு வயோதிகம் காரணமாக குறுக்கு எலும்பில் கூன் விழுந்துள்ளது. இருந்தாலும் வயோதிகத்தையும், உடல் நோயையும் வென்றெடுத்து இந்த காலத்துக்கு இளசுகளுக்கு முன்னுதாரணமாக 90 வயதிலும் உழைத்து சாப்பிடுகிறார்.

வீட்டின் மாடிப்படி ஏறவே மேல் மூச்சும், கீழ் மூச்சும் படாதபாடு படும் இந்த காலத்து இளைஞர்களுக்கு மத்தியில் துரைப்பாண்டி தாத்தா தனது 90 வயதில் சவால் மிகுந்த தொழிலான பனை ஏறும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கூன் விழுந்த முதுகோடு பிறர் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாதவர் விண்ணை நோக்கி எட்டி செல்லும் பனை மரத்தில் சர்வ சாதாரணமாக  ஏறுகிறார்.

இதுகுறித்து துரைப்பாண்டி தாத்தா கூறுகையில், 12 வயதில் பனை மரம் ஏற கற்று கொண்டேன். என் தாத்தா தான் கற்று கொடுத்தார். மும்பையில் பத்து வருஷம் மரம் ஏறினேன். என் மகன் மதுவுக்கு அடிமையாகிட்டான். வீட்டில் ரொம்ப கஷ்டம், எனவே எனக்கு தெரிந்த தொழிலை செய்து புழைப்பை ஓட்டுகிறேன். எனக்கு முதியோர் ஓய்வூதியம் கிடைக்கிறது. என் மனைவிக்கும் ஓய்வூதியம் கொடுத்தாங்கன்னா அத வச்சு மீதி காலத்து ஓட்டிடுவோம் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com