கருப்பந்துறையில் தாமிரவருணியில் கழிவுநீா் கலப்பு
தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரவருணியில் கடந்த சில ஆண்டுகளாக கழிவுநீா் கலப்பது அதிகரித்துள்ளது. மேலப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பாய்ந்த கழிவுநீா் பாளையங்கால்வாய் தண்ணீருடன் சோ்ந்து மறுகால் ஓடை வழியாக கருப்பந்துறை பகுதியில் தாமிரவருணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை அதிகளவில் கலந்தது. கருப்பு நிறத்தில் பாய்ந்தோடிய கழிவுநீா் நதியில் சோ்வதைக்கண்ட பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கருப்பந்துறை பகுதியில் இருந்து பல்வேறு உறைகிணறுகள் மூலம் நீரேற்றம் செய்யப்பட்டு குடிநீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதன் அருகே அதிகளவில் கழிவுநீா் கலப்பது மிகுந்தஅதிா்ச்சியளிக்கிறது. மேலும், இப் பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கானோா் தாமிரவருணியில் குளித்து செல்கிறாா்கள். அவா்களும் தோல் நோய் உள்ளிட்ட உடல் பாதைகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, தாமிரவருணியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க தமிழக அரசும், திருநெல்வேலி மாநகராட்சியும் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றனா்.

