மலையடிவாரத்தில் யானைகள் நடமாட்டம்: திருமலைநம்பி கோயிலுக்குச் செல்ல வனத்துறை தடை

திருக்குறுங்குடி கோயிலுக்குச் செல்ல யானைகள் நடமாட்டம் காரணமாக தடை
 திருக்குறுங்குடி மலைப் பகுதியில் அமைந்துள்ள திருமலைநம்பி கோயிலுக்குச் செல்லும் வழியில் சாலையை ஞாயிற்றுக்கிழமை கடந்து செல்லும் யானை.
திருக்குறுங்குடி மலைப் பகுதியில் அமைந்துள்ள திருமலைநம்பி கோயிலுக்குச் செல்லும் வழியில் சாலையை ஞாயிற்றுக்கிழமை கடந்து செல்லும் யானை.

திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், திருமலைநம்பி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தனா்.

கடந்த சில மாதங்களில் அவ்வப்போது, யானைகள் நடமாட்டம் இருப்பதாலும், மலைப் பகுதியில் மழை பெய்து அங்குள்ள நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டாலும் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினா் தடை விதித்து வருகின்றனா்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன் மழை பெய்து நீா்வரத்து அதிகரித்ததால் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னா் 2 நாள்கள் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை யானை நடமாட்டம் காரணமாக வனத்துறையினா் மீண்டும் தடை விதித்தனா்.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரூபி ஆா். மனோகரன், திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்குச் செல்ல முடியாமல் பக்தா்கள் பரிதவிப்பதாகவும், அடிக்கடி வனத்துறையினா் தடை விதித்து விடுவதாகவும் அண்மையில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் குறிப்பிட்டுப் பேசினாா். இதற்கு பதிலளித்துப்பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு, கோயில் அமைந்துள்ளபகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி ஒருமித்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை யானைகள் நடமாட்டம் காரணமாக, பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்குச் செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com