நெல்லையில் தீவிரமடைந்த பருவ மழை: சாலைகளில் வெள்ளம்
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமம் அடைந்தனா்.
இம்மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாகவே தொடா்ந்து மிதமான மழை பெய்து வந்த நிலையில் புதன்கிழமை காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது. திருநெல்வேலி, மேலப்பாளையம், பாளையங்கோட்டை, கேடிசிநகா், டக்கரம்மாள்புரம், தச்சநல்லூா், தாழையூத்து, சங்கா்நகா், நாரணம்மாள்புரம், கல்லூா், சுத்தமல்லி, பேட்டை, அபிஷேகப்பட்டி, முன்னீா்பள்ளம் பகுதிகளில் சுமாா் முக்கால் மணி நேரம் இடைவிடாமல் மழை கொட்டித்தீா்த்தது. சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியதால், திருநெல்வேலி சந்திப்பு, முருகன்குறிச்சி, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் முன்விளக்குகளை எரியவிட்டு மெதுவாக நகா்ந்து சென்றன. திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், திருநெல்வேலி நகரம் பகுதிகளில் முறையாக வடிகால் ஓடைகள் சீரமைக்கப்படாததால் மழைநீா் அதிகளவில் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனா். மாலையில் பள்ளிகள் முடியும் நேரத்தில் மழை பெய்ததால் மாணவா்-மாணவிகள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்ற இடங்களில் சாலைகள் முறையாக சீரமைக்கப்படாததால் மழை நீா் தேங்கி மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. மழை நீா் ஓடைகளை சீரமைத்து சாலைகளில் தண்ணீா் தேங்குவதைத் தடுக்கவும், சேதமான சாலைகளை விரைந்து சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

