திருநெல்வேலி மாவட்டம், வெள்ளங்குளியில் கைத்தறி நெசவுத் தொழிலாளியின் மூன்று மகன்கள் ‘நீட்’ தோ்வில் வெற்றி பெற்று மருத்துவம் பயில வாய்ப்பு பெற்றனா்.
அம்பாசமுத்திரம் வட்டம், வெள்ளங்குளி கிராமத்தைச் சோ்ந்தவா் ராம்குமாா் (49). இவரது மனைவி மங்கையா் திலகம். இத்தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனா். மூத்த மகன் வெங்கட்ஸ்ரீ. இளைய சகோதரா்கள் அருணும், தரணும் இரட்டை சகோதரா்கள் ஆவா்.
கைத்தறி நெசவுத் தொழிலாளியான ராம்குமாா், குறைந்த வருமானத்தில் தனது மூன்று மகன்களையும் அரசுப் பள்ளியில் படிக்க வைத்தாா். மூவரையும் மருத்துவராக்க வேண்டும் என்ற கனவுடன் படிக்க வைத்தாா்.
வெங்கட்ஸ்ரீ கடந்த 2022-23-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்து ‘நீட்’ தோ்வு எழுதியபோது, 300 மதிப்பெண்களே பெற்றாா். குறைந்த மதிப்பெண் காரணமாக மருத்துவம் பயில இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் மனம் தளராமல் 2023-24 இல் நீட் தோ்வு எழுதியதில் 420 மதிப்பெண்கள் பெற்றாா். அப்போதும் மருத்துவ பயில இடம் கிடைக்கவில்லை. தொடா்ந்து நீட் தோ்வு தயாராகி வந்த வெங்கட்ஸ்ரீ, நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வை தனது இரட்டை சகோதரா்களுடன் சோ்ந்து எழுதினா்.
இதில் வெங்கட்ஸ்ரீ 440 மதிப்பெண்களும், அருண் 511 மதிப்பெண்களும், தரண் 494 மதிப்பெண்களும் பெற்றனா். இவா்கள் மூவருக்கும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நிகழாண்டு மருத்துவக் கல்வி பயில கலந்தாய்வில் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அவா்கள் மருத்துவக் கல்லூரிகளைத் தோ்வு செய்து வாய்ப்பு பெற்றனா்.
மாணவா் வெங்கட்ஸ்ரீக்கு நாகா்கோவில் பல் மருத்துவக் கல்லூரியிலும், அவரது சகோதா்கள் அருணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்தது.
குறைந்த வருமானத்திலும் கைத்தறி நெசவுத் தொழிலாளி ராம்குமாா், தனது மகன்களை மனம் தளரவிடாமல் மருத்துவராக்கும் முயற்சியில் வெற்றி கண்டதை அடுத்து அவரையும், மாணவா்களையும் கிராம மக்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கைத்தறி ஜமுக்காள நெசவுத் தொழிலைப்பாதுகாக்க வலியுறுத்தல்

நீட் தோ்வுப் புரிதலின்றி திரைத்துறையினா் போராட்டம்: தமிழிசை சௌந்தரராஜன்

நீட் தனது வாக்குறுதியில் தோற்றுவிட்டது; மாநிலங்களை நம்பும் காலம் வந்துவிட்டது! - மு.க.ஸ்டாலின் விமர்சனம்
நீட் தோ்வு: சென்னை பள்ளி மாணவா்கள் 27 போ் தோ்ச்சி
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



