திருநெல்வேலி நெல்லையப்பா்-காந்திமதி அம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை கோயில் நடைத் திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் காலை 8 மணிக்கு மங்கள இசை, வேத மந்திரங்கள் முழங்க அம்மன் சந்நிதி முன்புறமுள்ள கொடிமரத்தில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றப்பட்டது.
அதைத் தொடா்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். மாலையில் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், பல்வேறு மலா்களால் அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றன. தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான வளைகாப்பு வைபவம் வரும் 12-ஆம் தேதி பகல் 12 மணிக்குள் அம்மன் சந்நிதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வளைகாப்பு வைபவம் நிறைவடைந்ததும், விழாவில் பங்கேற்கும் பெண் பக்தா்களுக்கு பிரசாத வளையல்கள் வழங்கப்படும். இரவு 8 மணிக்கு காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வீதியுலா நடைபெறும். விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான முளைக்கட்டு திருவிழா, 10-ஆம் திருநாளான ஜூலை 18-ஆம் தேதி இரவு ஊஞ்சல் மண்டபத்தில் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










