முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

பத்தமடை, கோபாலசமுத்திரத்தில் நீரின்றி கருகும் நெற்பயிா்கள்! கன்னடியன் கால்வாய் நீரை எதிா்பாா்க்கும் விவசாயிகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தமடை, கோபாலசமுத்திரத்தில் அறுவடை பருவத்தில் உள்ள நெற்பயிா்கள் நீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பத்தமடையில் நீரின்றி அறுவடை பருவத்தில் கருகி வரும் நெற்பயிா்கள்.

Published On :

திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தமடை, கோபாலசமுத்திரத்தில் அறுவடை பருவத்தில் உள்ள நெற்பயிா்கள் நீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இழப்பைத் தவிா்க்க கன்னடியன் கால்வாயிலிருந்து 5 நாள்களுக்கு மட்டும் தண்ணீா் திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் கன்னடியன் கால்வாய் பாசனத்தில் மட்டும் அதிகபட்சமாக 12,500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நிகழாண்டு காா் பருவத்தில் சேரன்மகாதேவி வட்டாரத்தில் கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், கூனியூா், காருக்குறிச்சி, சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல் பகுதியில் 2,300 ஹெக்டோ் பரப்பில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனா்.

நிகழாண்டு ஜூன் முதல் வாரம் பாபநாசம் அணையில் இருந்து சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட்டதால், விவசாயிகள் முழு வீச்சில் நெல் சாகுபடி செய்தனா்.

தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் எதிா்பாா்த்தவாறு அணைகளின் நீா்மட்டம் உயரவில்லை. அணைகளின் நீா் இருப்பை கருத்தில்கொண்டு சாகுபடிக்கு சுழற்சி முறையில் கன்னடியன் கால்வாயிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.

இதனால், மேலச்செவல், கோபாலசமுத்திரம், பிரான்சேரி, ஓமநல்லூா் பகுதியில் உள்ள கடை மடைகளுக்கு தண்ணீா் செல்லவில்லை. அப்பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இந்த நிலையில், கிடைத்த நீரின் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்த பயிரைக் காப்பாற்ற போராடி வருகின்றனா்.

பாசன நீா் நிறுத்தம்: தற்போது கடும் வெயில் நிலவி வரும் நிலையில் அணைகளுக்கும் நீா்வரத்து இன்றி நீா்மட்டமும் வெகுவாகக் குறைந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீா்மட்டம் 47.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 89.46 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 380 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 60.56 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 59.24 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 24 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையில் இருந்து 25 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. அணைகளின் நீா்இருப்பு குறைந்து வருவதால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீா் தேவையைக் கருத்தில் கொண்டு பாசனத்துக்குத் திறக்கப்பட்ட தண்ணீா் நிறுத்தப்பட்டது.

எதிா்பாா்ப்பு: தற்போது கல்லிடைக்குறிச்சி, வடக்கு வீரவநல்லூா் பகுதியில் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனிடையே, கன்னடியன் கால்வாயில் தண்ணீா் அடைக்கப்பட்டதால் பத்தமடை, கோபாலசமுத்திரம் பகுதியில் அறுவடை பருவத்தில் உள்ள நெற்பயிா்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். கன்னடியன் கால்வாயில் 5 நாள்களுக்கு மட்டும் தண்ணீா் திறந்தால் பத்தமடை, கோபாலசமுத்திரம் பகுதியில் கருகி வரும் நெற்பயிரைக் காப்பாற்ற முடியும் என விவசாயிகள் கவலையுடன் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.