கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையம் உள்பட அடிப்படை வசதிகள்

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையம் உள்பட அடிப்படை வசதிகள் செய்யப்பட

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையம் உள்பட அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆவது பெரிய நகரமாக திகழ்கிறது கோவில்பட்டி. மதுரை மற்றும் திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு அடுத்தபடியாக கோவில்பட்டி ரயில் நிலையம் மூலம்தான் ரயில்வேக்கு அதிக வருமானம் கிடைக்கிறது.

கோவில்பட்டி, எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரன்கோவில் வட்டாரப் பயணிகளும் இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். இங்கு தினமும் சுமார் 40 ரயில்களும், வார சிறப்பு ரயில்கள், சிறப்பு ரயில்கள், சரக்கு ரயில் என 15 ரயில்களும் கடந்து செல்கின்றன.

ஆனால் இங்கு பயணிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகள் உறுதி செய்யப்படவில்லை. 2 ஆவது நடைமேடை பகுதியில் உள்ள மின்விளக்குகள், குடிநீர் குழாய்கள் மற்றும் முதல் நடைமேடையில் உள்ள குடிநீர் குழாய்களும் சேதமடைந்துள்ளன.

மேலும் தற்கொலை மற்றும் ரயிலில் அடிபட்டு இறப்பவர்களின் சடலங்களை அகற்றுவதற்கு தூத்துக்குடியிலிருந்து ரயில்வே போலீஸார் வர வேண்டிய சூழ்நிலை உள்ளதால், அதிக சிரமம் ஏற்படுவதோடு மட்டுமன்றி சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. இதுபோன்றச் செயல்களைத் தவிர்க்கவும், தடுக்கவும் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கை.

புறக்காவல் நிலையம்: சில ஆண்டுகளுக்கு முன் இந்த ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை புறக்காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. ஆனால் சுமார் 10 ஆண்டுகளாக இந்த புறக்காவல் நிலையம் செயல்படவில்லை.

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் உள்ள 2 நடைமேடைகளும் 22 பயணிகள் பெட்டிகளைக் கொண்ட நடைமேடையாக உள்ளன. ஆனால் 24 பெட்டிகளைக் கொண்ட நெல்லை விரைவு ரயில், கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு வந்து நிற்கும்போது அதில் பயணிகள் இறங்குவதற்கும், ஏறுவதற்கும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும், ரயில் நிலையத்தில் உள்ள கோச் இண்டிகேட்டர் சிஸ்டம் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் இருப்பதால் முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் ரயில் பெட்டி எந்த இடத்தில் நிற்கும் என்பது தெரியாமல் ரயில் வந்தவுடன் ஓட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனால் சில பயணிகள் ரயிலில் ஏற முடியாமல் ரயிலை தவறவிட வேண்டியுள்ளது. ஒருசில நேரங்களில் பயணிகள் குடும்பத்தோடு வந்தால் ஒருசிலர் ரயிலில் ஏறிவிட்டு, சிலர் ரயிலில் ஏற முடியாமல் தவிக்கின்றனர். இதனால் ரயிலில் உள்ள அபாயச் சங்கிலியை இழுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதுபோல, முதல் நடைமேடையில் சுமார் 5 இடங்களில் குடிநீர் வசதி உள்ளது. ஆனால் அதில் 2 குழாய்களில் மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. 2ஆவது நடைமேடையில் முற்றிலும் குடிநீர் வசதி கிடையாது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதுபோல, 2ஆவது நடைமேடையில் பயணிகள் நிற்பதற்கு 2 இடங்களில் மட்டுமே மேற்கூரைகள் உள்ளன. மற்ற இடங்களில் மேற்கூரையே இல்லை.

முதல் நடைமேடையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இலவசக் கழிப்பிடம் உள்ளது. ஆனால் ஆண்களுக்கான கழிப்பிடத்தில் முற்றிலும் கதவுகளே கிடையாது. பெண்களுக்கான கழிப்பிடத்தில் சேதமடைந்த நிலையில் கதவுகள் உள்ளன. புதிய கழிப்பிடம் கட்டப்பட்டு அது காட்சிப் பொருளாகவே இருந்து வருகிறது. கழிப்பிட வசதிகளே இல்லாமல் 2 ஆவது நடைமேடை உள்ளது. 2ஆவது நடைமேடையிலும் கோச் இண்டிகேட்டர் சிஸ்டம் கிடையாது.

எனவே, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு வசதிக்கு ஏற்ப ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்தை திறக்க வேண்டும். போதுமான மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி அசம்பாவிதங்களைத் தவிர்க்க வேண்டும். பயணிகளின் தாகத்தைப் போக்குவதற்கு குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும். கோச் இண்டிகேட்டர் சிஸ்டம் இரு நடைமேடைகளிலும் அமைக்க வேண்டும். ஆட்டோக்களை ஒழுங்குபடுத்தி நிற்பதற்கு நடைபாதை அமைக்க வேண்டும். புதிதாக கட்டப்பட்டு காட்சிப் பொருளாக இருந்து வரும் கழிப்பிட வசதியை உடனடியாக பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும், ரயில்வே நிலையத்தில் உள்ள நிலத்தடி நீரை குடிநீராக மாற்றுவதற்கான இயந்திரத்தைப் பொருத்தி பயணிகளின் தாகத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே நிலைய அதிகாரிகள் கூறுகையில்,   கோவில்பட்டி நகரிலிருந்து சீவலப்பேரி குடிநீர் சுமார் 18 தினங்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகம் ஆவதால் போதுமான குடிநீரை பயணிகளுக்கு வழங்க இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது. இலவசக் கழிப்பிடத்தைப் பயணிகள் சேதப்படுத்துவதால் முறையாகப் பயன்படுத்த முடியாமல் உள்ளது.

எனவே பயணிகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் இங்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்த இயலும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com